மண்டியாவில் ஜனதா தளம்(எஸ்) கட்சியினர் தாக்குதல்: மக்கள் நடமாடும் பகுதியில் கொரோனா பரிசோதனை நடத்தியது ஏன்? - குமாரசாமி கேள்வி

மண்டியாவில் ஜனதா தளம்(எஸ்) கட்சியினர் நடத்திய தாக்குதல் விஷயத்தில், மக்கள் நடமாடும் பகுதியில் கொரோனா பரிசோதனை நடத்தியது ஏன்? என்று குமாரசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

Update: 2020-04-26 00:10 GMT

பெங்களூரு, 

கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் களத்தில் பணியாற்றி வரும் பத்திரிகையாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி மண்டியாவில் இந்த கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றது.

இதற்கு ஜனதா தளம்(எஸ்) கட்சியை சேர்ந்த ஸ்ரீகண்டேகவுடா மற்றும் அவரது மகன் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்து, ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இது கர்நாடகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ஜனதா தளம்(எஸ்) தலைவர் குமாரசாமி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ஒருபோதும் ஏற்க முடியாது

“மண்டியா நகரில் கொரோனா பரிசோதனை முகாமில் பத்திரிகையாளர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் மீது எங்கள் கட்சியை சேர்ந்த ஸ்ரீகண்டேகவுடா எம்.எல்.சி. மற்றும் அவரது மகன் ஆகியோர் தாக்கியது தவறு. இதை நான் ஏற்க மாட்டேன். இந்த நெருக்கடியான நிலையிலும் பத்திரிகையாளர்கள் களத்தில் இறங்கி செய்திகளை சேகரித்து மக்களுக்கு வழங்கிறார்கள்.

அவர்களின் நலன் கருதி, அரசு அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்கிறது. தவறு யார் செய்தாலும் தவறே. இத்தகைய தாக்குதல் சம்பவங்களை ஒருபோதும் ஏற்க முடியாது. அதே நேரத்தில் மாநில அரசு, இந்த கொரோனா பரிசோதனை நிகழ்வை அந்த மாவட்ட ஆஸ்பத்திரிகளில் நடத்த உத்தரவிட்டுள்ளது.

பீதியில் இருக்கிறார்கள்

ஆனால் மண்டியா மாவட்ட கலெக்டர், ஆஸ்பத்திரியில் பரிசோதனையை நடத்தாமல், நகரில் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் அவற்றை நடத்த ஏற்பாடு செய்துள்ளார். கொரோனா விஷயத்தில் மக்கள் ஏற்கனவே பீதியில் இருக்கிறார்கள். இத்தகைய சூழ்நிலையில் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் கொரோனா பரிசோதனையை நடத்தியது ஏன்? இதுகுறித்து அவர் விளக்கம் அளிக்க வேண்டும்.”

இவ்வாறு குமாரசாமி கூறினார்.

மேலும் செய்திகள்