ஊரடங்கால், கரைந்து போன உப்பள தொழில்: வேதாரண்யத்தில், லட்சக்கணக்கில் தேங்கி கிடக்கும் உப்பு மூட்டைகள்
ஊரடங்கு உத்தரவால் உப்பள தொழில் கரைந்து போனது. வேதாரண்யத்தில், லட்சக்கணக்கில் உப்பு மூட்டைகள் தேங்கி கிடக்கிறது.
வேதாரண்யம்,
ஊரடங்கு உத்தரவால் உப்பள தொழில் கரைந்து போனது. வேதாரண்யத்தில், லட்சக்கணக்கில் உப்பு மூட்டைகள் தேங்கி கிடக்கிறது. இதனால் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கிறார்கள்.
உப்பு உற்பத்தி
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகாவில் அகஸ்தியம்பள்ளி, கோடியக்காடு, கடினல்வயல் ஆகிய பகுதிகளில் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி நடைபெறுகிறது. தமிழகத்தில் தூத்துக்குடிக்கு அடுத்தபடியாக உப்பு உற்பத்தியில் 2-வது இடம் வகிக்கும் வேதாரண்யத்தில் ஆண்டு ஒன்றுக்கு 6 லட்சம் மெட்ரிக் டன் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் லாரி மூலம் நாள்தோறும் அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. இதனால் உப்பள பகுதியில் வேலை பார்த்து வந்த 10 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்து வீடுகளிலேயே முடங்கிப்போய் இருக்கின்றனர்.
லட்சக்கணக்கில் உப்பு மூட்டைகள் தேக்கம்
இந்த நிலையில் அத்தியாவசிய பொருளான உப்பை உற்பத்தி செய்வதற்கு மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெற்று தற்போது 800 உப்பள தொழிலாளர்கள் சமூக இடைவெளி விட்டு உப்பள பகுதியில் உப்பு எடுத்து வருகின்றனர்.
தற்போது நாள்தோறும் சிறு வேன்களில் உப்பு ஏற்றுமதி நடந்து கொண்டு இருக்கிறது. கடும் வெயில் தாக்கத்தால் உப்பு உற்பத்தி அதிகரிக்கும் நிலையில் நாள் ஒன்றுக்கு 100 லாரிகளில் உப்பு ஏற்றுமதி செய்யப்படும்.
ஆனால் ஊரடங்கு உத்தரவால் போக்குவரத்து முடக்கம் காரணமாக தற்போது அத்தியாவசிய தேவைக்கு மட்டும் 10 லாரிகளில் நாள்தோறும் உப்பு ஏற்றுமதியாகிறது. இதனால் லட்சக்கணக்கில் உப்பு மூட்டைகள் தேங்கி கிடக்கின்றன. உப்பு ஏற்றுமதி இல்லாததால் உப்பள தொழிலாளர்கள் வேலை இழந்து வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.
ஊரடங்கு உத்தரவு முடிந்து இயல்பு நிலை திரும்பி உப்பு ஏற்றுமதி எப்போது நடைபெறும்? தங்களது வாழ்வாதாரத்திற்கு எப்போது வழிகிடைக்கும்? என உப்பள தொழிலாளர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.