தோட்டங்களில் கருப்பு கொடி ஏந்தி விவசாயிகள் போராட்டம் - அவினாசி பகுதியில் பரபரப்பு
நிவாரண உதவித்தொகை ரூ.10 ஆயிரம் வழங்கக்கோரி அவினாசி பகுதியில் உள்ள தோட்டங்களில் விவசாயிகள் கருப்பு கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அவினாசி,
திருப்பூர் மாவட்டம் அவினாசி பகுதியில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் உள்ளனர். தற்போது ஊரடங்கு உத்தரவு காரணமாக விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே விவசாயிகளுக்கு நிவாரண உதவித்தொகை ரூ.10 ஆயிரம் உடனே வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் தமிழக அரசு விவசாயிகளுக்கு இதுவரை நிவாரண உதவித்தொகை வழங்கவில்லை.
எனவே நிவாரண உதவித்தொகை வழங்கக்கோரி பழங்கரை, அவினாசிலிங்கம்பாளையம், ராமநாதபுரம், துலுக்கமுத்தூர், குப்பாண்டம்பாளையம், வெள்ளியம்பாளையம், உப்பிலிபாளையம், தண்ணீர் பந்தல்பாளையம், ஆலாம்பாளையம், சுண்டக்காம்பாளையம், மருதூர், குளத்துப்பாளையம், நல்லிகவுண்டம்பாளையம், கந்தம்பாளையம், ராவுத்தம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகள் சங்கத்தினர் தங்களது தோட்டங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கையில் கருப்பு கொடியை ஏந்தி இருந்தனர். சில பகுதிகளில் விவசாயிகள் தங்களது குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கூறியதாவது:-
சிறு குறு விவசாயிகளுக்கு நிவாரண உதவித்தொகையாக ரூ.10 ஆயிரம் உடனே வழங்க வேண்டும். அனைத்து விவசாய கடன்களை ஓராண்டுக்கு தள்ளி வைக்க வேண்டும். 100 நாள் வேலைத்திட்டத்தை விவசாயப் பணிகளுக்கு பயன்படுத்த உத்தரவிட வேண்டும். ஏழைக்குடும்பங்களுக்கு ரூ.5 ஆயிரம் உதவித்தொகை வழங்க வேண்டும். கொரோனா வைரஸ் பாதிப்புள்ள மாவட்டங்களை சேர்ந்த அனைவருக்கும் நோய்த்தொற்று பரிசோதனை செய்ய வேண்டும்.
விவசாயிகளுக்கு எதிரான திட்டங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்ட வேளாண் உற்பத்திப் பொருளுக்கு நிவாரணத்தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இந்த போராட்டம் சிறிது நேரம் நடந்தது. அப்போது விவசாயிகள் கோஷங்களை எழுப்பினார்கள். இந்த போராட்டத்தில் அவினாசி பகுதி நிர்வாகிகள் எஸ்.வெங்கடாசலம், முத்து ரத்தினம்,ஆர்.பழனிச்சாமி, ஏ. ஈஸ்வரமூர்த்தி, பி. பழனிச்சாமி, ஊராட்சி மன்ற உறுப்பினர் வேலுச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த போராட்டம் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.