கொரோனா பற்றி தெரிந்து கொள்ள “ஆரோக்கிய சேது” செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்: கலெக்டர் பிரபாகர் தகவல்
கொரோனா பற்றி தெரிந்து கொள்ள “ஆரோக்கிய சேது“ என்ற செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி,
கொரோனா பற்றி தெரிந்து கொள்ள “ஆரோக்கிய சேது“ என்ற செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் பிரபாகர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கொரோனா தொற்று தடுப்பு முன்எச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா தொற்று பரவல் இடங்களை கண்டறிய ஏதுவாக மத்திய அரசால் ஏற்படுத்தப்பட்டுள்ள “ஆரோக்கிய சேது“ என்னும் செயலியினை பொதுமக்கள் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்து, அதனை பயன்படுத்தி தங்கள் பகுதியில் கொரோனா தொற்று உள்ள நபர்கள், அருகில் உள்ள கொரோனா தொற்று உள்ள இடங்கள் ஆகியவற்றை தெரிந்து கொள்ளலாம்.
இச்செயலியானது பயன்படுத்துபவர்களுக்கு அருகில் உள்ள கொரோனா தொற்று உள்ள இடங்கள் மற்றும் ஹாட் ஸ்பாட்க்கான எச்சரிக்கையினை உடனுக்குடன் தெரிவிக்கும். மேலும், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உரையாடக்கூடிய செயலியானது ஆரோக்கிய சேது - ஐ.வி.ஆர்.எஸ். என பெயரிடப்பட்டுள்ளது. அதனையும் பயன்படுத்தி தங்கள் பகுதியில் கொரோனா தொற்று உள்ள நபர்கள், தொற்று உள்ள இடங்கள் ஆகியவற்றை தெரிந்து கொள்ளலாம்.
தொழில்நுட்ப வசதிகள் மற்றும் விழிப்புணர்வு இல்லாத பொதுமக்களின் பயன்பாட்டிற்காக 94999 12345 என்ற தொலைபேசி எண் செயல்பாட்டில் உள்ளது. மேற்படி எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுத்தால், ஐ.வி.ஆர்.எஸ். செயலி மூலம் மீண்டும் அழைப்பு விடுக்கப்பட்டு, கேள்வி-பதில் முலம் அழைப்பாளருக்கு உரிய வழிகாட்டுதல்கள் வழங்கப்படும். ஆரோக்கிய சேதுவிற்கு கோடு பலகைகள் இணையதளம் https://sac-cess.nic.in ஆகும். பொதுமக்கள் இந்த வசதிகளை பயன்படுத்தி, தகவல்களை பெற்ற பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.