ஊரடங்கால் உருகிய ஐஸ் தயாரிப்பு தொழில்

தூத்துக்குடியில் ஊரடங்கால் ஐஸ் தயாரிப்பு தொழில் உருகிப்போய் விட்டது.

Update: 2020-04-25 22:30 GMT
தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் பல்வேறு தொழில்கள் முடங்கி உள்ளன. அதேபோன்று மீன்பிடி தொழிலும் முடக்கப்பட்டு இருந்தது.

தொடர்ந்து மீனவர்களின் கோரிக்கையை ஏற்று நிபந்தனைகளுடன் மீன்பிடி தொழிலுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதன்பேரில் சுழற்சி முறையில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்று வருகின்றனர்.

ஐஸ் உற்பத்தி

மீன்பிடி தொழிலுக்கு மிகவும் முக்கியமானது ஐஸ் ஆகும். ஏனென்றால், மீனவர் கள் பிடிக்கும் மீன்களை கெட்டுப்போகாமல் கரைக்கு கொண்டு வந்து விற்பனை செய்வதற்கு ஐஸ் மிகவும் உறுதுணையாக உள்ளது. இதனால் தூத்துக்குடியில் ‘ஐஸ்‘ தயாரிக்கும் தொழில் சுறுசுறுப்பாக நடந்து வந்தது.

தற்போது கொரோனா காரணமாக தொழில் முடங்கி உள்ளது. இதில் பணியாற்றி வந்த ஏராளமான தொழிலாளர்கள் வேலை இழந்து உள்ளனர். குறைந்த அளவில் படகுகள் கடலுக்கு சென்று வருவதால், ஐஸ் கட்டிகளும் குறைந்த அளவிலேயே உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால், மின்கட்டணம் எப்போதும் போல் அதிகமாகவே உள்ளது. இதனால் ஐஸ் உற்பத்தியாளர்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர்.

ரூ.3 லட்சம்

இதுகுறித்து சிலுவைப்பட்டியை சேர்ந்த ஐஸ் கம்பெனி உரிமையாளர் டொமினிக் கூறியதாவது:-

தூத்துக்குடியில் மட்டும் 25 ஐஸ் கம்பெனிகள் உள்ளன. இந்த கம்பெனிகளில் சுமார் 300 பேர் பணியாற்றி வருகின்றனர். இதன்மூலம் மறைமுகமாக சுமார் 1,500 பேர் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். ஊரடங்கு காரணமாக சுமார் 1½ மாதமாக கம்பெனிகள் மூடப்பட்டு இருந்தன.

தற்போது மீன்பிடி படகுகள் குறைந்த அளவில் செல்வதால் ஐஸ் கம்பெனிகள் இயக்கப்படுகிறது. முன்பு மாதம் 400 ஐஸ்கட்டிகள் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இதற்கு ரூ.3 லட்சம் மின்கட்டணம் செலுத்தினோம். தற்போது 100 ஐஸ் கட்டிகள் கூட உற்பத்தி செய்யவில்லை. ஆனாலும் ரூ.3 லட்சம் மின்கட்டணம் செலுத்த வேண்டி உள்ளது. அதேபோன்று 5 சதவீதம் ஜி.எஸ்.டி விதிக்கப்படுகிறது. இதனால் நாங்கள் பெரும் இழப்பை சந்தித்து வருகிறோம்.

மின்கட்டண சலுகை

ஏற்கனவே மூடப்பட்ட ஐஸ் கம்பெனியில் மீண்டும் உற்பத்தியை தொடங்குவதற்கு சுமார் ரூ.2 லட்சம் வரை செலவாகிறது. இதனால் ஐஸ் தொழில் நலிவடைந்து உள்ளது. ஆகையால் அரசு மின்கட்டண சலுகை அளிக்க வேண்டும். மானிய விலையில் மின்சாரம் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்