திருச்சியில் நிவாரண பொருட்கள் பெற அலைமோதிய குடிசைவாழ்மக்கள்
திருச்சியில், குடிசைவாழ் மக்களுக்கு தன்னார்வலர்கள் வழங்கிய நிவாரண பொருட்களை சமூக இடைவெளியின்றி முண்டியடித்தபடி பெற்றுச் சென்றனர்.
திருச்சி,
திருச்சியில், குடிசைவாழ் மக்களுக்கு தன்னார்வலர்கள் வழங்கிய நிவாரண பொருட்களை சமூக இடைவெளியின்றி முண்டியடித்தபடி பெற்றுச் சென்றனர்.
ஊரடங்கு
ஊரடங்கு காரணமாக கடந்த மாதம் 25-ந் தேதி முதல் பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வெளியில் வேலைக்கும் செல்ல முடியவில்லை. வீட்டில் சாப்பிடுவது, டி.வி. பார்ப்பது, தூங்குவது என்ற மனநிலைக்கு வந்து விட்டனர். ஆனால், வீடற்ற தெருவோரவாசிகள், குடிசை வாழ் மக்கள் தினமும் சாப்பாட்டிற்காக அல்லல்பட்டு வருகிறார்கள். அவர்களுக்கு அரசியல் கட்சியினர், சமூக அமைப்புகள், தன்னார்வலர்கள் உள்ளிட்டவர்கள் சமைக்க தேவையான அரிசி, காய்கறிகள் உள்ளிட்டவைகளை நிவாரணமாக வழங்கி வருகிறார்கள்.
இந்நிலையில், திருச்சி மேலப்புதூர் கெம்ஸ் டவுன் பகுதியில் குடிசைவாழ் மக்களுக்காக அரிசி, காய்கறிகள் அடங்கிய தொகுப்புகளையும், முக கவசங்களையும் ஒரு அமைப்பினர் இலவசமாக வழங்கினர். அவற்றை பெற்றுக்கொள்வதற்காக மேலப்புதூர், கெம்ஸ் டவுன், காஜாபேட்டை பகுதியில் உள்ள குடிசைவாழ் மக்கள் ஏராளமானவர்கள் திரண்டு வந்தனர். அங்கு சமூக விலகல் ஏதுமின்றி முண்டியடித்தபடி வந்து நிவாரண பொருட்களை பெற்றுச்சென்றனர். அவர்களில் பலர் முக கவசங்கள் கூட அணிந்து வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இறைச்சி கடைகள்
சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சி சமைத்து சாப்பிடுவதை பொதுமக்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த நிலையில் இன்று(சனிக்கிழமை) முதல் 2 நாட்களுக்கு தற்காலிக காய்கறி சந்தைகள் அனைத்தும் மூடப்படுகின்றன. மேலும் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் வகையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஆடு, கோழி உள்ளிட்ட இறைச்சி கடைகளும், மீன் கடைகளும் முற்றிலும் இயங்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
இதன் காரணமாக நேற்று திருச்சி மாநகரில் உள்ள ஆட்டு இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. சில கடைகளில் சமூக விலகலை கடைபிடித்து பொதுமக்கள் ஆட்டு இறைச்சியை வாங்கினர். பல கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இறைச்சி வாங்கியதை காண முடிந்தது.
கடந்த வாரம் கிலோவுக்கு ரூ.800 முதல் ரூ.900 வரை விற்ற ஆட்டிறைச்சி தொடர்ந்து அதே விலையிலேயே விற்பனை ஆனது. திருச்சி மாநகரில் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் ஆட்டு இறைச்சி தனிக்கறி ரூ.1000 என்றும் விற்பனை செய்யப்பட்டது.
கொரோனா பீதி எதிரொலியாக கோழி இறைச்சி கடைகளில் கூட்டம் மிகவும் குறைவாகவே காணப்பட்டது. அதே வேளையில் கோழி முட்டையை பொதுமக்கள் சமூக விலகலை கடைபிடித்து பல இடங்களில் வாங்கி சென்றனர். ஒரு முட்டை ரூ.4.50-க்கு விற்பனை செய்யப்பட்டது.