அனைத்து கடைகளும் மூடப்படுகிறது: நெல்லையில் நாளை முழு ஊரடங்கு தென்காசியிலும் அமல்
நெல்லையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. இதேபோல் தென்காசி மாவட்டத்திலும் நகரசபை பகுதிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.
நெல்லை,
நெல்லையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. இதேபோல் தென்காசி மாவட்டத்திலும் நகரசபை பகுதிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.
முழு ஊரடங்கு
சமூக விலகலை 100 சதவீதம் கடைபிடிக்கும் வகையில் நாளையும் (ஞாயிற்றுக்கிழமை), வருகிற 3-ந் தேதியும் நெல்லை மாநகரில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுகிறது என்று நெல்லை மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் அறிவித்து உள்ளார்.
அதன்படி, நெல்லையில் நாளை முழு ஊரடங்கு உத்தரவு அமலாகிறது. இதையொட்டி நாளை அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருக்கும். தற்காலிக மார்க்கெட்டுகள், காய்கறி கடைகள், மளிகை, இறைச்சி கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் மூடப்படுகிறது. மருந்து கடைகள் மற்றும் ஆஸ்பத்திரிகளுக்கு மட்டும் இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.
கடும் நடவடிக்கை
இதன் காரணமாக பொதுமக்களும் வெளியே நடமாடக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதை மீறி வெளியே சுற்றுவோர் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க உள்ளனர்.
எனவே, பொதுமக்கள் முழு ஊரடங்கிற்கு ஒத்துழைப்பு தர வேண்டும். கொரோனா தடுப்பு நடவடிக்கையில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தென்காசியில்...
இதேபோல், தென்காசி மாவட்டத்திலும் நகரசபை பகுதிகளில் நாளை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது.
இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து நகரசபை பகுதிகளிலும், சமூக விலகலை 100 சதவீதம் பொதுமக்கள் கடைபிடிக்கும் பொருட்டு நாளை (ஞாயிற்றுக்கிழமை) அனைத்து கடைகளும் முழுமையாக அடைக்கப்படும். மருந்து கடைகள், மருத்துவமனைகள் மட்டும் விதி விலக்கு உண்டு. இறைச்சி கடைகள் மட்டும் காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை திறந்து இருக்க அனுமதிக்கப்படும். எனவே, பொதுமக்கள் நாளை மருத்துவ தேவை நீங்கலாக வீட்டை விட்டு வெளியே வராமல் 100 சதவீத சமூக இடைவெளியை கடைபிடித்து மாவட்ட நிர்வாகத்துக்கு முழு ஒத்துழைப்பு தரும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்‘ என்று கூறப்பட்டு உள்ளது.