நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற மேலும் 3 பேர் வீடு திரும்பினர் தென்காசியில் பெண்ணுக்கு தொற்று உறுதி

நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த மேலும் 3 பேர் நேற்று வீடு திரும்பினர். தென்காசி மாவட்டத்தில் பெண் ஒருவருக்கு நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டது.

Update: 2020-04-25 01:56 GMT
நெல்லை, 

நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த மேலும் 3 பேர் நேற்று வீடு திரும்பினர். தென்காசி மாவட்டத்தில் பெண் ஒருவருக்கு நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டது.

கொரோனா சிகிச்சை

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி உள்ளது. இதில் நெல்லை மாவட்டமும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. மாவட்டத்தில் இதுவரை 63 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்தனர்.

அவர்களில் 52 பேர் வரை அடுத்தடுத்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். அவர்கள் தங்களது வீட்டில் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள ஆலோசனை வழங்கப்பட்டு உள்ளது.

மேலும் 3 பேர் ‘டிஸ்சார்ஜ்’

இந்த நிலையில் ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் இருந்து நேற்று மேலும் 3 பேர் பூரண குணமடைந்து ‘டிஸ்சார்ஜ்‘ ஆகி உள்ளனர். அதில் ஒருவர் நெல்லை மேலப்பாளையத்தை சேர்ந்தவர் ஆவார். இதையடுத்து நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 10 பேர் மட்டுமே கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலப்பாளையத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 20 பேரில் ஏற்கனவே 19 பேர் குணமடைந்து வீடு திரும்பி விட்டனர். நேற்று மேலும் ஒருவர் குணமடைந்து விட்டார். இதனால் மேலப்பாளையம் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதவிர தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள அய்யனாரூத்தை சேர்ந்த ஒரு பெண்ணும் வீடு திரும்பினார். தென்காசி மாவட்டம் புளியங்குடியில் இருந்து கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றவர்களில் முதன்முதலாக 72 வயது முதியவரும் சிகிச்சை முடிந்து குணமடைந்து வீடு திரும்பினார்.

பெண்ணுக்கு கொரோனா

இதற்கிடையே, தென்காசி மாவட்டம் புளியங்குடியை சேர்ந்த 65 வயது பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர் உடனடியாக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

தென்காசி மாவட்டத்தில் ஏற்கனவே 32 பேர் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று மேலும் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதால், அந்த மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 33 ஆக அதிகரித்து உள்ளது. அதில் ஒருவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால் மொத்தம் 32 பேர் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்