மணவாளக்குறிச்சி பகுதியில் கூண்டுகள் வைத்தும் சிக்காத மர்ம விலங்கை பிடிக்க வனத்துறை தீவிரம் கண்காணிப்பு கேமராக்கள் அமைத்து நடவடிக்கை

மணவாளக்குறிச்சி பகுதியில் கூண்டுகள் வைத்தும் சிக்காத மர்ம விலங்கை பிடிக்க வனத்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

Update: 2020-04-25 01:45 GMT
மணவாளக்குறிச்சி,

மணவாளக்குறிச்சி பகுதியில் கூண்டுகள் வைத்தும் சிக்காத மர்ம விலங்கை பிடிக்க வனத்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த பகுதியில் 6 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளன.

மர்ம விலங்கு அட்டகாசம்

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் மக்கள் வீடுகளுக்குள்ளே முடங்கி உள்ளனர். இதனால், காட்டு விலங்குகள் ஊருக்குள் புகுந்து ஆங்காங்கே சுற்றும் சம்பவம் நடந்து வருகிறது. இந்த நிலையில் மணவாளக்குறிச்சி பகுதியில் மர்ம விலங்கு ஒன்று புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகிறது.

பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்த சிலுவைமுத்து என்பவருடைய வீட்டின் முன்பு கட்டியிருந்த 2 ஆடுகளை கடித்து கொன்றது. இந்த சம்பவம் நடந்த மறுநாள் வான்கோழியையும் கடித்து குதறி வேட்டையாடி உள்ளது. மேலும், முயல் ஒன்றை மர்ம விலங்கு விரட்டி சென்றதை சிலர் பார்த்துள்ளனர். அப்போது, அது சிறுத்தையை போன்று இருந்ததாக கூறியதால் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து வனத்துறையினர் மர்ம விலங்கை பிடிக்க நடவடிக்கை எடுத்தனர். அதன்படி மணவாளக்குறிச்சி பகுதியில் ஆங்காங்கே 4 கூண்டுகள் வைக்கப்பட்டன. அதில் ஒரு கூண்டில், ஆடும் கட்டப்பட்டிருந்தது. ஆனால், 3 நாட்கள் ஆகியும் மர்ம விலங்கு சிக்கவில்லை. இதனால் தொடர்ந்து பொதுமக்கள் அச்சத்திலேயே உள்ளனர்.

கேமராக்கள் பொருத்த...

இந்த நிலையில் மணவாளக்குறிச்சி பிள்ளையார்கோவில் பகுதியில் வனத்துறையினர் மீண்டும் ஆய்வு செய்தனர். பின்னர், மர்ம விலங்கு நடமாட்டம் ஏதேனும் இருக்கிறதா? என்பதை கண்காணிக்க 6 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் வைக்க நடவடிக்கை எடுத்தனர். கேமராவில் பதிவாகும் காட்சியை வைத்து, அது எந்த விலங்கு என்பதை அறிந்து அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்