நாகர்கோவிலில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்கு மருத்துவ பரிசோதனை சளி மாதிரி சேகரிப்பு
நாகர்கோவிலில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்கு மருத்துவ பரிசோதனை நடந்தது. அப்போது சளி மாதிரி சேகரிக்கப்பட்டது.
நாகர்கோவில்,
நாகர்கோவிலில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்கு மருத்துவ பரிசோதனை நடந்தது. அப்போது சளி மாதிரி சேகரிக்கப்பட்டது.
போலீசாருக்கு பரிசோதனை
குமரி மாவட்டத்தில் கொரோனா நோய் பரவாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாவட்ட சுகாதார துறை, வருவாய் துறை, தீயணைப்பு துறை, போலீசார் மற்றும் தூய்மை பணியாளர்கள் ஆகியோர் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளிலும் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தடுப்பு பணிகளில் ஈடுபடும் போலீசாருக்கு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் வடிவீஸ்வரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரத்யேக அறையில் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.
சளி மாதிரி சேகரிப்பு
இதில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பங்கேற்று மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். அவர்களிடம் இருந்து சளி மாதிரி சேகரிக்கப்பட்டு கொரோனா ஆய்வுக்காக அனுப்பப்பட்டது.
இதில் நாகர்கோவிலில் கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளில் பணிபுரியும் போலீசாரும் அடங்குவர். மேலும் இத்தகைய பரிசோதனை தினமும் நடத்தப்படும் என மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.