பாதராயனபுரா வன்முறை சம்பவத்தில் கைதான 5 பேருக்கு கொரோனா - ராமநகர் சிறையில் அடைக்க எதிர்ப்பு-பரபரப்பு
பெங்களூரு பாதராயனபுராவில் கொரோனா பரிசோதனைக்கு சென்ற சுகாதார அதிகாரிகள், ஆஷா ஊழியர்கள் மீது தாக்குதல் நடைபெற்றது. இந்த வன்முறை தொடர்பாக கைதானவர் களில் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. அவர்களை ராமநகர் சிறையில் வைக்க எதிர்ப்பு கிளம்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
பெங்களூரு,
கர்நாடகத்தில் இதுவரை 450-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
மேலும் 18 பேர் இந்த நோய் தாக்கி உயிரிழந்துள்ளனர். இதில் மாநில தலைநகரான பெங்களூருவில் 120 பேருக்கு இந்நோய் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இந்த நிலையில் பெங்களூரு மாநகராட்சிக்கு உட்பட்ட பாதராயனபுரா வார்டில் 19 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அவர்களுடன் தொடர்பில் இருந்த 58 பேரை தனிமைப்படுத்தி மருத்துவ பரிசோதனை செய்ய மாநகராட்சி சுகாதாரத் துறையினர், ஆஷா மருத்துவ திட்ட ஊழியர்கள் கடந்த 19-ந்தேதி இரவு அங்கு சென்றனர்.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து 150-க்கும் மேற்பட்டோர் வன்முறையில் ஈடுபட்டனர். ஊழியர்கள் மீது கற்கள் வீசி தாக்கினர். அத்துடன் தற்காலிக போலீஸ் சோதனை சாவடியும், சாலைகளை மூடி வைத்திருந்த தகரம், இரும்பு தடுப்பு வேலிகளும் அடித்து நொறுக்கி சூறையாடப்பட்டன.
ராமநகர் சிறையில் அடைப்பு
இந்த வன்முறை தொடர்பாக ஜே.ஜே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தற்போது தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த வன்முறை தொடர்பாக ஒரு பெண், 7 சிறுவர்கள் உள்பட 130 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர்கள் அனைவரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது நீதிபதி அனைவரையும் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அவர்களை பெங்களூரு அருகே பரப்பனஅக்ரஹாராவில் உள்ள மத்திய சிறையில் அடைக்க போலீசார் திட்டமிட்டனர். ஆனால் அங்கு ஏற்கனவே தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டு இருப்பதாலும், அங்கு வன்முறையில் ஈடுபட்டவர்களை அடைத்தால் கொரோனா தொற்று ஏற்படக் கூடும் என்ற அச்சம் ஏற்பட்டது.
இதனால் வன்முறையில் தொடர்புடையவர்களை ராமநகரில் உள்ள சிறையில் அடைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக ராமநகர் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த 177 கைதிகள், கடந்த 21-ந்தேதி பரப்பன அக்ரஹாரா சிறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். மேலும் 17 கைதிகள் அதே சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். அதைதொடர்ந்து வன்முறை வழக்கில் கைதான 49 பேர் அன்று இரவே ராமநகர் சிறையில் அடைக்கப்பட்டனர். மறுநாள் 72 பேர் ராமநகர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
5 பேருக்கு கொரோனா பாதிப்பு
அதாவது வன்முறையில் தொடர்புடைய 121 விசாரணை கைதிகள் ராமநகர் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் சிறையில் உள்ள 2 வார்டுகளில் அடைத்து வைக்கப்பட்டு இருந்தனர். ஒரு வார்டில் சுமார் 20 முதல் 25 பேர் தங்கியிருந்தனர். இதில் விசாரணை கைதிகள் 2 பேருக்கு நேற்று முன்தினம் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனால் 2 பேரும் இரவோடு இரவாக பெங்களூரு விக்டோரியா அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துவரப்பட்டனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அவர்களுடன் இருந்த மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது நேற்று காலை உறுதியானது. இதனால் அவர்களும் சிகிச்சைக்காக விக்டோரியா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
கொரோனா பாதித்த விசாரணை கைதிகளுடன் இருந்த சுமார் 50 பேருக்கு கொரோனா தொற்று இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அவர்களை தனிமைப்படுத்தி கண்காணிக்க அதிகாரிகள் தீவிர நடவடிக்கையில் இறங்கினர். ராமநகர் மாவட்டத்தில் இதுவரை யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. இந்த நிலையில் பாதராயனபுரா வன்முறையில் தொடர்புடைய 5 விசாரணை கைதிகளுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு இருப்பதால் ராமநகர் மாவட்ட மக்கள் கடும் பீதி அடைந்துள்ளனர். இந்த விவகாரம் பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கடும் எதிர்ப்பு கிளம்பியது
விசாரணை கைதிகளை ராமநகர் சிறையில் அடைத்ததற்கும், கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை ராமநகர் சிறையில் தங்க வைக்க கூடாது எனவும் எதிர்ப்புகள் கிளம்பின. ராமநகர் சிறையில் விசாரணை கைதிகளை அடைத்ததற்கு முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி, மாநில காங்கிரஸ் தலைவரும், கனகபுரா தொகுதி எம்.எல்.ஏ.வுமான டி.கே.சிவக்குமார் ஆகியோர் கர்நாடக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், கொரோனா பாதித்த விசாரணை கைதிகளுடன் தொடர்பில் இருந்தவர்களை ராமநகர் சிறையில் தங்கவைக்கக் கூடாது என்றும், அவர்களை உடனே இடமாற்றம் செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். அதுபோல் பெங்களூரு புறநகர் தொகுதி எம்.பி. (காங்கிரஸ்) டி.கே.சுரேஷ், ராமநகரில் இருந்து விசாரணை கைதிகளை உடனே இடமாற்றம் செய்ய வேண்டும். இல்லையெனில் தனியாக உண்ணாவிரதம் இருப்பேன் என்று எச்சரிக்கை விடுத்தார்.
இதற்கிடையே ராமநகர் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த விசாரணை கைதிகள் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது குறித்தும், அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பாகவும் போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை, முதல்-மந்திரி எடியூரப்பா ஆகியோர் போலீஸ் மற்றும் சிறைத்துறை உயர் அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில், ராமநகர் சிறையில் அடைக்கப்பட்ட விசாரணை கைதிகளை பெங்களூரு ஹஜ் பவனுக்கு இடமாற்றம் செய்யவும், அவர்களை தனிமைப்படுத்தி கண்காணிக்கவும், கொரோனா பரிசோதனை நடத்தவும் முடிவு எடுக்கப்பட்டது.
ஹஜ் பவனுக்கு இடமாற்றம்
அதன்படி ராமநகர் சிறையில் இருந்த பாதராயனபுரா வன்முறையில் கைதான 116 பேர் உள்பட 133 பேரும், ஒரு பஸ்சில் 14 பேர் வீதம் கர்நாடக அரசு போக்குவரத்து கழக பஸ்களில் ஏற்றி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பெங்களூரு ஹஜ் பவனுக்கு அழைத்துவரப்பட்டு தங்கவைக்கப்பட்டனர். ஒவ்வொரு பஸ்சிலும் பாதுகாப்புக்காக தலா 3 போலீசாரும் உடன் வந்தனர். பஸ்களை ஓட்டி வந்த டிரைவர்களும், போலீசாரும் உடல் முழுவதும் மறைந்து பாதுகாப்பு கவச உடைகள் அணிந்திருந்தனர். ஹஜ் பவனில் தங்கவைக்கப்பட்ட விசாரணை கைதிகளுக்கு சுகாதாரத் துறையினர், மருத்துவ பரிசோதனை நடத்தியுள்ளனர். மேலும் அவர்களது சளி, ரத்தம் மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
முன்னதாக பெங்களூரு ஹஜ் பவனில், ஏற்கனவே ஊரடங்கு உத்தரவை மீறி சட்டவிரோதமாக தங்கியிருந்த வெளிநாட்டினர் 25 பேர் உள்பட 37 பேர் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டு இருந்தனர். அவர்கள் பெங்களூருவில் உள்ள தனியார் ஓட்டலுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.