ஊரடங்கால், திருவோணம் பகுதியில் நடமாடும் வாகனம் மூலம் உரங்கள் விற்பனை

ஊரடங்கு காரணமாக திருவோணம் பகுதியில் நடமாடும் வாகனம் மூலம் உரங்கள் விற்பனை செய்யப்படுகிறது.

Update: 2020-04-25 00:02 GMT
ஒரத்தநாடு,

ஊரடங்கு காரணமாக திருவோணம் பகுதியில் நடமாடும் வாகனம் மூலம் உரங்கள் விற்பனை செய்யப்படுகிறது.

கடைகள் அடைப்பு

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் விவசாய பணிகளுக்கு ஊரடங்கில் இருந்து தளர்வு விதிக்கப்பட்டுள்ளது. அதாவது விவசாய பணிகளுக்கு தேவைப்படும் உரம் மற்றும் பூச்சி கொல்லி மருந்துகளை விவசாயிகள் பெறுவதற்கு வசதியாக குறிப்பிட்ட நேரங்களில் உரக்கடைகளை திறந்து சமூக இடைவெளியை பின்பற்றி விற்பனை செய்ய அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் தஞ்சை மாவட்டம் ஊரணிபுரத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் உள்பட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன.

பாதுகாப்பு பணி

மேலும் இந்த பகுதியை தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்து அதன் எல்லைகளில் “சீல்” வைத்து போலீசார் இரவு-பகலாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மருத்துவ துறையினர் உள்ளிட்ட அரசுதுறை அலுவலர்களும், வெட்டுவாக்கோட்டை ஊராட்சி நிர்வாகமும் கொரோனா வைரஸ் மேலும் பரவுவதை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் திருவோணம் பகுதியில் விவசாயிகள் பயிரிட்டுள்ள கோடை நெல் சாகுபடி, சோளம், கடலை, உளுந்து மற்றும் காய்கறி பயிர்களுக்கு தேவைப்படும் உரங்கள் கிடைக்காமல் சிரமப்பட்டனர். இதனை அறிந்த தஞ்சை மாவட்ட நிர்வாகம் விவசாயிகள் விவசாய பணிகளை தடையின்றி தொடரும் வகையில் திருவோணம் மற்றும் ஊரணிபுரம் பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு உரம் உள்ளிட்ட விவசாய இடுபொருட்களை நடமாடும் வாகனம் மூலம் விற்பனை செய்ய ஏற்பாடு செய்துள்ளது.

நடமாடும் வாகனம்

தஞ்சை மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் உத்தரவின் பேரில் வேளாண்மைதுறை அதிகாரிகளின் வழிகாட்டுதலுடன் திருவோணம் பகுதியில் நடமாடும் வாகனம் மூலம் விவசாயிகளுக்கு உரங்கள் மற்றும் பயிர் பாதுகாப்பு பூச்சிகொல்லி மருந்துகளை கிராமங்கள் தோறும் சென்று விற்பனை செய்ய உரக்கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அனுமதி பெற்றுள்ள விற்பனையாளர்கள், விவசாயிகளுக்கு உரம் மற்றும் பூச்சி மருந்து பொருட்களை அரசு நிர்ணயித்துள்ள விலையில் மட்டுமே வழங்கப்பட வேண்டும்.

அதேபோல் விவசாயிகளிடம் பெறும் பணத்திற்கு உடனடி ரசீது வழங்க வேண்டும் என்பது உள்பட சில நிபந்தனைகளும், வழிகாட்டுமுறைகளும் விதிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து திருவோணம் பகுதியில் கிராமங்கள்தோறும் நடமாடும் வாகனம் மூலம் உரம் வினியோகம் தொடங்கியது. இதனால் உரம் தட்டுப்பாடு காரணமாக சிரமப்பட்ட விவசாயிகள் நிம்மதியடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்