சிவப்பு மண்டலத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரம் - சுகாதாரத்துறை மந்திரி ஸ்ரீராமுலு பேட்டி
கர்நாடகத்தில் சிவப்பு மண்டலத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரமாக அமல்படுத்தப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை மந்திரி ஸ்ரீராமலு கூறினார்.
பெங்களூரு,
கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து கர்நாடக சுகாதாரத்துறை மந்திரி ஸ்ரீராமுலு பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ராமநகர் பசுமை மண்டலத்தில் உள்ளது. அங்கு இதுவரை கொரோனா பரவவில்லை. ராமநகர் சிறையில் பாதராயனபுரா வன்முறையாளர்களை அடைத்ததற்கு குமாரசாமி எதிர்ப்பு தெரிவித்தார்.
அவர்களில் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களை மீண்டும் பெங்களூருவுக்கே மாற்ற நடவடிக்கை எடுத்துள்ளோம்.
ராமநகர் சிறையில் அந்த வன்முறையாளர்களை அடைத்ததில் உள்நோக்கமோ, அரசியலோ இல்லை.
கொரோனா பரவிவிடும் என்ற நோக்கத்தில் குமாரசாமி தனது கருத்தை கூறியுள்ளார். அது சரியானது தான். கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்களின் பட்டியலில் கர்நாடகம் தற்போது 11-வது இடத்தில் உள்ளது.
ஊரடங்கு கட்டுப்பாடுகள்
கொரோனாவை தடுக்க மாநில அரசு எடுத்துள்ள முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மத்திய சுகாதாரத்துறை மந்திரியிடம் விவரங்களை வழங்கியுள்ளோம்.
கர்நாடகத்தில் கொரோனா அதிகம் பாதித்துள்ள சிவப்பு மண்டலத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தீவிரமாக அமல்படுத்தியுள்ளோம். கொரோனா தடுப்பு பணியில் அரசின் 10 துறைகளை சேர்ந்த ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
இவ்வாறு மந்திரி ஸ்ரீராமுலு கூறினார்.