கொரோனா நோய் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து துறை அலுவலர்களுக்கும் பரிசோதனை

கொரோனா நோய் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள அனைத்துதுறை அலுவலர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று தஞ்சை மண்டல கண்காணிப்புக்குழு அலுவலர் சண்முகம் வலியுறுத்தி உள்ளார்.

Update: 2020-04-24 23:52 GMT
தஞ்சாவூர், 

கொரோனா நோய் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள அனைத்துதுறை அலுவலர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று தஞ்சை மண்டல கண்காணிப்புக்குழு அலுவலர் சண்முகம் வலியுறுத்தி உள்ளார்.

ஆய்வுக்கூட்டம்

தஞ்சை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனை, மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றில் தஞ்சை மண்டல கொரோனா நோய்த்தடுப்பு கண்காணிப்புக்குழு அலுவலர் சண்முகம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டத்திற்கு கலெக்டர் கோவிந்தராவ் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் சண்முகம் பேசியதாவது:-

கொரோனா நோய் தடுப்பு பணியில் முன்னின்று களப்பணி மேற்கொண்ட அனைத்து துறை அலுவலர்களுக்கும், அடுத்து வரும் நாட்களில் சுவாப் டெஸ்டிங் மூலமாக நோய் குறித்த பரிசோதனை செய்ய வேண்டும். அதற்கு ஒவ்வொரு துறை வாரியாக ஒரு அலுவலர்களை நியமித்து ஆய்வு செய்யப்பட்டது குறித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

நோய் தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வரும் 55 நபர்களுடைய தொடர்பில் இருந்தவர்களில், அவர்களின் தொடர்பு குறித்து ஆய்வு செய்து அவர்களுக்கும் சுவாப் டெஸ்ட் மூலமாக நோய் தொற்று குறித்து ஆய்வு செய்ய வேண்டும். நாளொன்றுக்கு அலுவலர்கள் 50 சதவீதம் மற்றும் சிகிச்சை பெற்று வருபவர்களின் தொடர்பில் இருந்தவர்கள் 50 சதவீதம் என ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

வசதி செய்ய வேண்டும்

ராசா மிராசுதார் மருத்துவமனைக்கு வெளிமாவட்டங்களில் இருந்து வரக்கூடிய நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது குறித்தும் அவர்கள் அவர்தம் மாவட்டங்களிலேயே சிகிச்சை பெற தேவையான ஏற்பாடுகள் செய்யவும் முடியாதபட்சத்தில் அவர்களே நமது மாவட்டத்தில் சிகிச்சை பெற அனுமதிப்பது குறித்து தகுந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு மன அழுத்தம் ஏற்படாத வகையில் இசை கேட்பதற்கும், செய்தித்தாள்களை வாசிப்பதற்கும், டிவி பார்ப்பதற்கும் வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். டாக்டர்கள் மூலமாக தொடர்ந்து காணொலிக் காட்சி மூலம் அவர்களுக்கு சிகிச்சை அளிப்பது போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மருத்துவக்கல்லூரி முதல்வர் குமுதாலிங்கராஜ் மற்றும் டாக்டர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்