ராமநகருக்கு அரசு கொரோனாவை பரப்பிவிட்டது - காங்கிரஸ் எம்.பி. டி.கே.சுரேஷ் குற்றச்சாட்டு
ராமநகருக்கு அரசு கொரோனாவை பரப்பிவிட்டதாக காங்கிரசை சேர்ந்த டி.கே.சுரேஷ் எம்.பி. குற்றம்சாட்டியுள்ளார்.
ராமநகர்,
காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரும், முன்னாள் மந்திரி டி.கே.சிவக்குமாரின் சகோதரருமான டி.கே.சுரேஷ் எம்.பி. ராமநகரில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
பெங்களூரு பாதராயனபுராவில் கொரோனா அறிகுறி உள்ளவர்களை ராமநகர் சிறையில் அடைத்தது மிகப்பெரிய தவறு. தற்போது அவர்களில் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது அதிர்ச்சி அளிக்கக்கூடியதாக உள்ளது. அந்த சிறையில் சுமார் 170கைதிகள் இருந்தனர்.
அவர்களை வேறு பகுதிகளுக்கு மாற்றிவிட்டு, இந்த பாதராயனபுரா வன்முறையாளர்களை ராமநகர் சிறையில் அடைத்து உள்ளனர். இங்கு மாற்றும்போதே அதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்தேன். அவர்களுக்கு எந்த பரிசோதனையும் செய்யாமல் இந்த சிறைக்கு மாற்றினர். துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் ஒரு டாக்டர். அவர்களை எந்த பரிசோதனைக்கும் உட்படுத்தாமல் ராமநகர் சிறையில் அடைத்தது சரியா?.
வைரசை பரப்பிவிட்டது
தற்போது பசுமை மண்டலத்தில் இருந்த ராமநகருக்கு கர்நாடக அரசு கொரோனா வைரசை பரப்பிவிட்டது. அதனால் பாதராயனபுரா வன்முறையாளர்களை உடனடியாக வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும். இல்லாவிட்டால் நாங்கள் தீவிர போராட்டம் நடத்துவோம்.
இவ்வாறு டி.கே.சுரேஷ் கூறினார்.