ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 மாற்றுத்திறனாளிகள் உணவின்றி வாடும் அவலம் காப்பாற்ற அரசு முன்வருமா? என எதிர்பார்ப்பு
ஊரடங்கு வைத்த ஆப்பால், மயிலாடுதுறை அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 மாற்றுத்திறனாளிகள் உணவின்றி வாடுகின்றனர்.
குத்தாலம்,
ஊரடங்கு வைத்த ஆப்பால், மயிலாடுதுறை அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 மாற்றுத்திறனாளிகள் உணவின்றி வாடுகின்றனர். அவர்கள் தங்களை காப்பாற்ற அரசு முன்வருமா? என எதிர்பார்த்து உள்ளனர்.
வேதனையிலும் வேதனை
பொதுவாக ஒரு குடும்பத்தில், ஒரு குழந்தை மாற்றுத்திறனாளியாக பிறந்து விட்டாலே அந்த குடும்பமே சோகத்தில் ஆழ்ந்து விடும். ஆனால், மயிலாடுதுறை அருகே உள்ள திருமணஞ்சேரியில் ஒரு குடும்பத்தில் உள்ள 6 பேருமே மாற்றுத்திறனாளியாக இருக்கிறார்கள் என்றால் அது வேதனையிலும் வேதனையான செய்தியாகும். ஏற்கனவே வறுமையில் வாடி வந்த இந்த குடும்பத்தினர், ஊரடங்கால் அடியோடு வருவாயை இழந்து கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்த சோக கதையை பார்ப்போம்!.
ஒரு குடும்பத்தில் 6 மாற்றுத்திறனாளிகள்
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே திருமணஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் முரளி(வயது 53). 3 அடி உயரம் கொண்ட மாற்றுத்திறனாளியான இவர் மட்டுமின்றி இவரது குடும்பத்தில் உள்ள அனைவருமே மாற்றுத்திறனாளிகள் என்பது உள்ளத்தை உருக வைப்பதாக உள்ளது.
இவரது சகோதரர் ரகு(48), 4 அடி உயரமும், சகோதரி லட்சுமி(45), 3½ அடிக்கு சற்று குறைவாகவும், இளைய சகோதரர் பாலாஜி(35) ஆகியோர் 3 அடி உயரமும் கொண்ட மாற்றுத்திறனாளிகள். இதில் சகோதரர்கள் 3 பேரும் பத்தாம் வகுப்பு வரையில் படித்துள்ளனர். இவர்களது தாய் வசந்தாவும்(73), இக்குடும்பத்திலேயே சிறுவயது முதல் வசித்து வரும் வசந்தாவின் சகோதரி லட்சுமியும்(60) காது கேட்காத, பேசவும் முடியாத மாற்றுத்திறனாளிகள் ஆவர்.
கருணை உள்ளத்தோடு திருமணம்
முரளியின் தந்தை நாராயணன், திருமணஞ்சேரியில் உள்ள பெருமாள் கோவிலில் அர்ச்சகராக பணியாற்றியவர். நல்ல உடல் தகுதியுடன் இருந்த இவர் காது கேட்காத, வாய் பேச முடியாத தனது அக்காள் மகள் வசந்தாவை கடந்த 55 ஆண்டுகளுக்கு முன்பு கருணை உள்ளத்தோடு திருமணம் செய்து கொண்டார். மேலும் மாற்றுத்திறனாளியான வசந்தாவின் சகோதரி லட்சுமியையும் தனது குடும்பத்தில் சேர்த்து பராமரித்து வந்தார்.
கருணை உள்ளம் கொண்ட நாராயணனின் வாழ்க்கையில் இயற்கை கருணை காட்டவில்லை. அவருக்கு பிறந்த 4 குழந்தைகளுமே மாற்றுத்திறனாளிகளாக பிறந்தது நாராயணனின் வாழ்க்கையில் தீராத சோகத்தை ஏற்படுத்தியது. இருந்தபோதிலும், தான் வாழ்ந்த வரையில் தனது குடும்பம் வறுமையின் கோரப்பிடியில் சிக்காமல், நாராயணன் காப்பாற்றி வந்தார். மேலும் தனது ஒரே பெண்ணான லட்சுமிக்கும் திருமணம் செய்து வைத்தார்.
வறுமையில் வாடுகிறது
இந்த நிலையில் கடந்த 2001-ம் ஆண்டு நாராயணன் இறந்த பிறகு அவரது குடும்பம் வறுமையில் வாடுகிறது. தன் தந்தை சேர்த்து வைத்திருந்த சொத்தை கொஞ்சம், கொஞ்சமாக விற்று தனது குடும்பத்தை காப்பாற்றி வந்த குடும்பத்தின் தலைமகனான முரளி, தந்தையின் மரணத்துக்கு பிறகு செய்வதறியாது திகைத்து நிற்கிறார்.
இந்த குடும்பத்தில் தற்போது வசிக்கும் 5 பேரும், வருவாய்த்துறை சார்பில் வழங்கப்படும் ஊனமுற்றோர் உதவித்தொகை தலா ரூ.1000 வீதம் ரூ.5 ஆயிரத்தை வைத்து குடும்பம் நடத்தி வந்தனர்.
சோதனை மேல் சோதனை
இந்த நிலையில் சோதனை மேல் சோதனையாக பாலாஜி நடத்தி வந்த மாற்றுத்திறனாளிகள் சுயஉதவிக்குழுவில் இருந்த உறுப்பினர்கள் சரிவர பணம் கட்டாத காரணத்தால், அந்த கடன் தொகைக்காக அக்குழுவின் தலைவரான பாலாஜி மற்றும் உறுப்பினர்கள் வசந்தா, லட்சுமி ஆகிய 3 பேரின் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகையை கடந்த 6 மாதங்களாக நிறுத்தி வைத்துள்ளது வங்கி நிர்வாகம்.
உதவித்தொகையை வைத்து ஒரு நாளைக்கு 2 வேளை உணவு சாப்பிட்டு வந்த இந்த குடும்பத்தினர் தற்போது ஒருவேளை உணவுக்கே சிரமப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
ஊரடங்கு வைத்த ஆப்பு
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாகை மாவட்ட கலெக்டர், திருமண பிரார்த்தனை தலமான திருமணஞ்சேரி உத்வாகநாத சாமி கோவிலில் பக்தர்கள் கொண்டு வரும் தேங்காய் உடைக்கும் பணியை(அர்ச்சகருக்கு உதவும் பணி)ரகுவுக்கு வழங்கினார். அந்த பணிக்காக அவருக்கு மாதம் ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டு வந்தது.
அந்த வருமானத்தை வைத்து ரகு தனது குடும்பத்தை காப்பாற்றி வந்தார். இந்த நிலையில் ஊரடங்கு இவரது வருமானத்திற்கு ஆப்பு வைத்தது. ஊரடங்கால், திருமணஞ்சேரி உத்வாகநாத சாமி கோவில் நடையும் அடைக்கப்பட்டுள்ளதால் தற்போது அந்த வருமானமும் இன்றி சாப்பாட்டுக்கே வழியில்லாமல் ரகு குடும்பத்தினர் மிகுந்த அவதிப்பட்டு வருகின்றனர்.
காப்பாற்ற அரசு முன்வருமா?
எனவே பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளி குடும்பத்திற்கு உரிய நிவாரணம் உடனே வழங்க வேண்டும் என்றும், அவர்களது கஷ்டத்தை நிரந்தரமாக போக்க குடும்பத்தில் யாரேனும் ஒருவருக்காவது அரசு வேலை வழங்கி காப்பாற்ற தமிழக அரசு முன்வருமா? என்றும் இந்த(மாற்றுத்திறனாளிகள்) குடும்பத்தினர் எதிர்பார்க்கின்றனர்.