சென்னையில், சப்-இன்ஸ்பெக்டரை விடாது துரத்தும் கொரோனா - மனைவி, 2 மகன்களும் பாதிப்பு
சென்னையில், சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரை கொரோனா விடாது துரத்தி வருகிறது. அவரது மனைவி மற்றும் 2 மகன்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை,
சென்னை எஸ்பிளனேடு போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றிய ஒருவர் முதலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரை தொடர்ந்து கடந்த செவ்வாய்க்கிழமை இரவு வடக்கு கடற்கரை போலீஸ் நிலையத்தில் சட்டம்-ஒழுங்கு பிரிவில் பணியாற்றிய ஒரு சப்-இன்ஸ்பெக்டர், எழும்பூர் ரெயில்வே போலீசில் பணியாற்றிய போலீஸ்காரர் என்று அடுத்தடுத்து கொரோனாவால் பாதிப்பு இருப்பதாக கூறி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதனால் கொரோனா சென்னை காவல்துறையை பீதியில் உறைய வைத்தது. சென்னை காவல்துறையில் பணியாற்றும் பெரும்பாலான போலீசாருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.
இந்தநிலையில் வடக்கு கடற்கரை போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய சப்-இன்ஸ்பெக்டர் பெரும் கஷ்டத்தை சந்தித்துள்ளார். அவரை, உன்னை விட்டேனா பார் என்று கொரோனா துரத்தி வருகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அவருக்கு பாசிட்டிவ் என்று கொரோனா பாதிப்பு இருப்பதாக கூறப்பட்டது. அவரது மனைவிக்கும் கொரோனா இருப்பதாக அப்போது சொல்லப்பட்டது. இருவரும் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.
புதன்கிழமையன்று ஸ்டான்லி மருத்துவமனையில் அவர்கள் இருவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அதிசயமாக அவர்கள் இருவருக்கும் கொரோனா தொற்று இல்லை (நெகட்டிவ்) என்று கூறிவிட்டனர். இதனால் நிம்மதி பெருமூச்சு விட்ட சப்-இன்ஸ்பெக்டரும் அவரது மனைவியும் வீடு திரும்பினார்கள். வீட்டில் தொடர்ந்து கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்றும், மீண்டும் பரிசோதனை செய்வோம் என்று தெரிவிக்கப்பட்டது. அடுத்து வியாழக்கிழமை அவர்களுக்கு நடந்த பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பதாக (பாசிட்டிவ்) கூறிவிட்டனர்.
ஏற்கனவே அவர்களது 2 மகன்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த முறை கண்ணீருடன் சப்-இன்ஸ்பெக்டர் ஒரு வேண்டுகோள் வைத்துள்ளார்.
இனிமேல் சோதனை வேண்டாம். எனது 2 மகன்கள், மனைவி ஆகியோருடன் நானும் ஒரே மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறோம், அந்த வாய்ப்பை தாருங்கள் என்று கேட்டுள்ளார். அவர் குடும்பத்துடன் நலம் பெற்று வர வேண்டும் என்று சென்னை நகர போலீசார் வேண்டி உள்ளனர்.
இதேபோல சென்னை பீர்க்கன்கரணை பகுதியில் மனைவிக்கு கொரோனா பரிசோதனை செய்ய, 70 வயது முதியவர் ஒருவர் ஆம்புலன்சில் அழைத்து சென்றார். மருத்துவமனையில் இருவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
ஆனால் அதிசயமாக இதில் மனைவி தப்பிவிட்டார். அவரை பரிசோதனைக்கு அழைத்து சென்ற முதியவருக்கு கொரோனா இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதுபோன்ற அதிசயங்களை கொரோனா நிகழ்த்தி கொண்டிருக்கிறது.
அதேபோல் கொரோனா அறிகுறியே இல்லாமல் பரிசோதனைக்கு சென்றவர்கள், பரிசோதனையில் பாசிட்டிவ் என்று வந்து, உடனே உயிரை விட்டவர்களும் இருக்கிறார்கள். 2 வாரங்கள் சிகிச்சைக்குப்பின் உயிர் இழப்பவர்களும் உள்ளனர். இதுபோன்ற மோசமான விளையாட்டுகள் கொரோனாவால் நிகழ்கின்றன. அதனால் தனிமைதான், இதற்கு நல்ல மருந்து என்று அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.