திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த மேலும் 10 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர் - வீடுகளில் தனித்திருக்க கலெக்டர் அறிவுரை
திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த மேலும் 10 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். வீடுகளில் தனித்திருக்க கலெக்டர் அறிவுரை வழங்கினார்.
ஆம்பூர்,
திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆம்பூரைச் சேர்ந்த 13 பேர், வாணியம்பாடியைச் சேர்ந்த 2 பேர், திருப்பத்தூரைச் சேர்ந்த ஒருவர் உள்பட ஆக மொத்தம் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, அவர்களுக்கு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அதில் சிகிச்சை பெற்று குணமடைந்த ஆம்பூரைச் சேர்ந்த 3 பேர், வாணியம்பாடி, திருப்பத்தூரைச் சேர்ந்த தலா ஒருவர் வீதம் மொத்தம் 5 பேர் கடந்தசில நாட்களுக்கு முன்பு வீடு திரும்பினர்.
அதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் வாணியம்பாடியைச் சேர்ந்த பெண் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்தது.
ஆலோசனை வழங்கினர்
இந்தநிலையில் வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ஆம்பூரைச் சேர்ந்த 3 பெண்கள் உள்பட 9 பேர், வாணியம்பாடியைச் சேர்ந்த ஒருவர் என மொத்தம் 10 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து பூரண குணமடைந்து நேற்று அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
வீடு திரும்பியவர்களை ஆம்பூர் மஜ்ஹருல் உலூம் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் கலெக்டர் ம.ப.சிவன்அருள், போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் ஆகியோர் வரவேற்று, மருத்துவமனையில் அவர்களுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை முறைகள் குறித்துக் கேட்டறிந்தனர்.
அனைவரும் குணமடைந்து வீடு திரும்பியது மகிழ்ச்சி அளிக்கிறது. வீடுகளில் தொடர்ந்து தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என கலெக்டர் ஆலோசனை வழங்கினார். இதையடுத்து அவர்களுக்கு பழக்கூடை வழங்கப்பட்டு, அதன்பிறகு அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
நிகழ்ச்சியில் அ.செ.வில்வநாதன் எம்.எல்.ஏ, திருப்பத்தூர் சுகாதாரதுறை துணை இயக்குனர் டாக்டர் சுரேஷ், துணை போலீஸ் சூப்பிரண்டு சச்சிதானந்தம், தாசில்தார் செண்பகவல்லி, நகராட்சி ஆணையாளர் த.சவுந்திரராஜன், மாதனூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராமு, தொழில் அதிபர் மொஹிபுல்லா, தோல் தொழிற்சாலை பொது மேலாளர்கள் பிர்தோஸ் கே.அஹமத், யூ.தமீம் அஹமத் ஆகியோர் பங்கேற்றனர்.
வாணியம்பாடியில் அமைச்சர் தலைமையில் வரவேற்பு
வாணியம்பாடியை அடுத்த ஜாப்ராபாத் பகுதியைச் சேர்ந்த ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அவர், பூரண குணமடைந்து வேலூரில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவரை, அமைச்சர் நிலோபர்கபீல் தலைமையில் பூங்கொத்து, பழங்கள் ஆகியவற்றை அளித்து வரவேற்றனர்.
அப்போது வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் காயத்திரி, வட்டாட்சியர் சிவபிரகாசம், ஆலங்காயம் ஒன்றிய ஆணையாளர் வசந்தி, வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி, கிராம நிர்வாக அலுவலர்கள் சற்குணகுமார், திலீப், நீலமணிகண்டன், ஊராட்சி செயலாளர் ராஜேந்திரன், நகர கூட்டுறவு கட்டிட சங்கத் தலைவர் முகமதுகாஷிப், டாக்டர் இத்ரீஸ் ஆகியோர் உடனிருந்தனர்.