திருக்கோவிலூர் அருகே தனித்தனி சம்பவம்: தண்ணீரில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி

திருக்கோவிலூர் அருகே நடந்த தனித்தனி சம்பவங்களில் 2 சிறுவர்கள் தண்ணீரில் மூழ்கி பலியானார்கள். இது பற்றிய விவரம் வருமாறு:-

Update: 2020-04-24 22:45 GMT
திருக்கோவிலூர், 

திருக்கோவிலூரை அடுத்துள்ள செட்டித்தாங்கல் கிராமத்தைச்சேர்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி இந்திரா. இவர் நேற்று காலையில் தனது வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்றார். இதனால் வீட்டில் தனியாக இருந்த அவரது மகள் பிரியதர்ஷினியும்(வயது8), மகன் சதீசும்(5) தாயை தேடி வயலுக்கு சென்று கொண்டு இருந்தனர்.

அப்போது வழியில் புதுவேங்கூர் ஏரிக்கரையில் நின்று மீன்கள் மேய்வதை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தனர். அப்போது சதீஷ் ஆர்வத்தில் மீனை பிடிப்பதற்காக இறங்கிய போது தண்ணீருக்குள் விழுந்து தத்தளித்தான். இதனால் அவனது அக்காள் பிரியதர்ஷினி, தம்பி தண்ணீரில் விழுந்துவிட்டான் என கூச்சல் போட்டாள்.

இதனைக்கேட்ட அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து பார்த்த போது சிறுவன் சதீஷ் தண்ணிரில் மூழ்கி மூச்சுத்திணறி இறந்து கிடந்தான். அவனை கரைக்கு தூக்கிக்கொண்டு வந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த திருக்கோவிலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம், சப்-இன்ஸ்பெக்டர் சிவசந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருக்கோவிலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தண்ணீரில் மூழ்கி பலியான சிறுவன் திருக்கோவிலூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 1-ம் வகுப்பு படித்து வந்தான். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது

திருக்கோவிலூர் அருகே உள்ள வீரட்டகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் விநாயகமூர்த்தி (35). இவர் தனது மனைவியுடன் சென்னையில் தங்கி உள்ளார். இதனால் அவரது மகன் மோகன்ராஜ் (7), அதே ஊரில் தனது பாட்டி பராமரிப்பில் இருந்தான்.

நேற்று முன்தினம் விளையாடச்சென்ற மோகன்ராஜ் வெகுநேரமாகியும் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. அவனது பாட்டி அவனை தேடி சென்ற போது, விவசாய கிணற்றில் மோகன்ராஜ் பிணமாக மிதந்து கொண்டு இருந்தான். இதை பார்த்து அவர் கதறி அழுதார். சம்பவ இடத்துக்கு திருக்கோவிலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம், சப்-இன்ஸ்பெக்டர் சிவசந்திரன் ஆகியோர் சென்று சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருக்கோவிலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்