கிருஷ்ணகிரியில், இன்று முதல் மளிகை கடைகள் காலவரையின்றி மூடல்
கிருஷ்ணகிரியில் இன்று முதல் மளிகை கடைகள் காலவரையின்றி மூடப்படுகின்றன.
கிருஷ்ணகிரி,
கொரோனா வைரஸ் பரவுவதின் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யக்கூடிய கடைகள் மட்டும், குறித்த நேரத்தில் திறந்து வைக்க அனுமதிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி நகரில் மளிகை கடைகள் காலையில் திறந்து வைத்து பொதுமக்களுக்கு பொருட்கள் விற்பனை செய்து வந்தனர். இந்த நிலையில் சமூக இடைவெளியை கடைபிடிக்கவில்லை என்று பல்வேறு கடைகளுக்கு அதிகாரிகளும், போலீசாரும் நெருக்கடி கொடுத்ததாக கூறிய அவர்கள் இன்று (சனிக்கிழமை) முதல் மளிகை கடைகளை திறப்பதில்லை என்று முடிவு செய்துள்ளனர்.
இது குறித்து கிருஷ்ணகிரி அனைத்து வணிகர் சங்க தலைவர் கேசவன் கூறியதாவது:-
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் அரசு கூறிய நேரத்தில் வணிகர்கள் காலையில் கடைகளை திறந்து வைத்து அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்து வருகிறார்கள். இந்த நேரத்தில் பொதுமக்களில் சிலர் சமூக இடைவெளியை கடைபிடிக்கவில்லை என்று கூறி, அதிகாரிகள் தொடர்ந்து வணிகர்களுக்கு நெருக்கடிகள் கொடுத்து வருகிறார்கள்.
இதனால் வணிகர்கள் குறிப்பிட்ட அந்த சிறிது நேரத்தில் கூட வியாபாரம் செய்ய முடியாமல் சிரமப்படுகிறார்கள். எனவே இன்று (சனிக்கிழமை) முதல் அனைத்து மளிகை கடைகளையும் மூட முடிவு செய்துள்ளோம். மளிகை கடைகள், மண்டிகள் என அனைத்து கடைகளும் மூடப்படும் என்று அவர் கூறினார்.
இதே போல கிருஷ்ணகிரி நகரில் உள்ள பல்பொருள் அங்காடிகள் காலையில் திறந்து வைத்து, பொதுமக்களுக்கு பொருட்கள் வினியோகிக்கப்பட்டு வந்தன. நேற்று முன்தினம் காலையில் சமூக இடைவெளியை கடைபிடிக்கவில்லை என்று கூறி, போலீசார் பல்பொருள் அங்காடி ஒன்றை பூட்டி சாவியை எடுத்து சென்றனர். இந்த நிலையில் கிருஷ்ணகிரி நகரில் நேற்று முதல் பல்பொருள் அங்காடிகள் காலவரையின்றி மூடப்படுவதாக அறிவித்துள்ளனர்.
இது குறித்து பல்பொருள் அங்காடிகள் சங்க தலைவர் கண்ணன் கூறியதாவது:-
கொரோனா வைரசின் தாக்கம் காரணமாகவும், இன்றைய சூழ்நிலையில் சமூக இடைவெளியை கடைபிடிப்பதில் வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு இல்லாத காரணத்தால் கடுமையான நெருக்கடிக்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம். இதனால் வியாபாரத்தை தொடர முடியாத காரணத்தால் நாங்கள் காலவரையின்றி பல்பொருள் அங்காடிகளை மூடுவது என்று முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.