திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா வைரசின் தாக்கம் சமூக தொற்றாக மாறவில்லை - பாதிக்கப்பட்ட 110 பேரில் 49 பேர் குணமடைந்தனர்
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனாவால் இதுவரை 110 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 49 பேர் குணமடைந்து வீடு திரும்பியிருக்கிறார்கள். இதுவரை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் சமூக தொற்றாக மாறவில்லை என்று மண்டல சிறப்பு அதிகாரி ஞானசேகரன் தகவல் தெரிவித்து உள்ளார்.
திருப்பூர்,
சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரசுக்கு வெளிநாடுகளில் ஏராளமானவர்கள் பலியாகி உள்ளனர். இந்நிலையில் இந்தியாவில் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கிடையே டெல்லியில் நடந்த தப்லிக் ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்ட ஈரோட்டை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் காரணமாக இந்த மாநாட்டில் கலந்துகொண்ட மற்றவர்களுக்கும் கொரோனா தொற்று இருக்க வாய்ப்பு இருக்கும் என்பதால், அவர்களை தாமாக முன்வந்து சிகிச்சைக்கு வரும்படி அரசு அழைப்பு விடுத்திருந்தது.
அதன்படி பலரும் அந்தந்த பகுதிகளில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் பலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் இருந்து மொத்தம் 69 பேர் டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டது தெரியவந்தது. இவர்கள் திருப்பூர் மற்றும் தாராபுரம், உடுமலை என பல்வேறு அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
110 பேருக்கு கொரோனா உறுதி
தொடர்ந்து அரசு ஆஸ்பத்திரிகளில் அவர்களின் ரத்தம் மற்றும் சளி மாதிரி சேகரிக்கப்பட்டது. இதில் சளி மற்றும் காய்ச்சல், இருமல் அதிகமாக இருப்பவர்களுக்கு ‘ஸ்வாப்’ எனப்படும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் டெல்லி மாநாட்டிற்கு சென்று வந்த பெரும்பாலானவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து அவர்கள் கோவையில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இதன் பின்னர் டெல்லி மாநாட்டிற்கு சென்றவர்களின் குடும்பத்தினருக்கும் கொரோனா தொற்று இருக்க வாய்ப்பு இருக்கும் என்பதால், அவர்களையும் அரசு ஆஸ்பத்திரி மற்றும் வீடுகளில் வைத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் பரிசோதனை மேற்கொண்டனர். அவர்களின் ரத்தம் மற்றும் சளி மாதிரியும் பரிசோதனை செய்யப்பட்டது.
இதுபோல் லண்டன் சென்று வந்த தொழிலதிபர் மற்றும் வெளிநாடு, வெளிமாநிலங்கள் சென்று வந்தவர்கள் என மொத்தம் மாவட்டம் முழுவதும் 110 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்கள் கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் மேல்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதுவரை அவினாசியில் 29 பேரும், திருப்பூர் மாநகர பகுதிகளில் 32 பேரும், தாராபுரத்தில் 14 பேரும், காங்கேயத்தில் ஒருவரும், பல்லடத்தில் 5 பேரும், பொங்கலூரில் ஒருவரும், மங்கலத்தில் 21 பேரும், உடுமலையில் 7 பேரும் என மொத்தம் 110 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா கட்டுப்பாடு மண்டலம்
இதன் பின்னர் கொரோனா பாதித்தவர்களின் வீடுகளை சுற்றி ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு கொரோனா கட்டுப்பாடு மண்டலமாக அறிவிக்கப்பட்டு அங்கு கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. அந்த பகுதிகளுக்கு செல்லும் சாலைகள் முழுவதும் சீல் வைக்கப்பட்டன. 24 மணி நேரமும் போலீசார் அங்கு கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள். அந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு தேவையான உணவுப்பொருட்களை வீட்டுக்கே கொண்டு சென்று கொடுப்பதற்கு வருவாய்த்துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர். காய்கறி, மளிகை பொருட்களை வீடு, வீடாக மக்களுக்கு வழங்கி வருகிறார்கள். அதுபோல் வெளி நபர்கள் யாரும் அந்த கட்டுப்பாடு மண்டல பகுதிக்குள் நுழையவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 11 பகுதிகள் கொரோனா கட்டுப்பாடு மண்டல பகுதியாக உள்ளது. சுமார் 2 லட்சத்து 97 ஆயிரம் பேர் அந்த பகுதிகளில் வசிக்கிறார்கள். இவர்களுக்கு மருத்துவ பரிசோதனையை மாநகராட்சி சுகாதாரப்பிரிவு அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். இதுபோல் அவினாசி, மங்கலம், காங்கேயம், தாராபுரம், உடுமலை பகுதிகளில் 8 கொரோனா கட்டுப்பாடு மண்டல பகுதி உள்ளது. இந்த பகுதிகளில் 66 ஆயிரம் மக்கள் வசிக்கிறார்கள். இவர்களுக்கு சுகாதாரப்பணிகள் துறை மூலமாக மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
877 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்
அதன்படி மாவட்டம் முழுவதும் மொத்தம் 2 ஆயிரத்து 580 பேருக்கு ‘ஸ்வாப்’ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுபோல் 1,342 பேருக்கு ‘ரேபிட் கிட்’ மூலம் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலானவர்களுக்கு முடிவுகள் வந்துள்ளது. இதில் அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை. இவர்களில் 183 பேருக்கு இன்னும் பரிசோதனை முடிவுகள் வராமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.
கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர், நெருங்கிய உறவினர்கள், அவர்களின் தொடர்பில் இருப்பவர்கள், பக்கத்து வீட்டுக்காரர் உள்ளிட்டவர்களை அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவத்துறையினர் கண்காணித்து வருகிறார்கள். அதன்படி 877 பேர் மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் உள்ளனர்.
49 பேர் குணமடைந்துள்ளனர்
கொரோனா பாதித்தவர்களுக்கு வழங்கப்பட்ட மேல் சிகிச்சையின் காரணமாக தற்போது வரை லண்டன் சென்று வந்த திருப்பூர் தொழிலதிபர் உள்பட மொத்தம் 49 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்த 49 பேரும் தொடர்ந்து 14 நாட்கள் சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்காணிப்பிலேயே இருக்கிறார்கள். அவர்களுக்கு வீடு திரும்பிய பிறகும் தொடர்ந்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தினமும் மருத்துவ குழுவினர் அவர்களை கண்காணித்தும் வருகிறார்கள். திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை கொரோனா பாதிப்பால் யாரும் பலியாகவில்லை.
மேலும் கொரோனா பாதிப்பால் மீதமுள்ள 61 பேரும் கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களின் குடும்பத்தினரும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். இதுபோல் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா வார்டில் தற்போது 9 பேர் கண்காணிப்பில் இருந்து வருகிறார்கள். அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை. இருப்பினும் அவர்கள் டெல்லி மாநாட்டிற்கு சென்று வந்தவர்கள் என்பதால், தொடர்ந்து டாக்டர்கள் கண்காணித்து வருகிறார்கள். இதுபோல் உடுமலை, தாராபுரம் மருத்துவமனைகளிலும் சிலர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
சமூக தொற்றாக மாறவில்லை
டெல்லி மாநாட்டிற்கு சென்று வந்தவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கும், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு இருந்து வருகிறது. இதிலும் மாநாட்டிற்கு சென்று வந்தவர்களில் 26 பேருக்கு இதுவரை தொற்று உறுதி செய்யப்படவில்லை. ‘ஹாட்ஸ்பாட்’ மாவட்டத்தில் திருப்பூர் இருந்தாலும், இதுவரை கொரோனா சமூக தொற்று ஏற்படவில்லை. இதற்கிடையே மண்டல சிறப்பு அதிகாரி ஞானசேகரன் திருப்பூரில் ஆய்வு மேற்கொண்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா சமூக தொற்றாக மாறவில்லை. இருப்பினும் ஊரடங்கை தீவிரப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
சமூக தொற்றை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகம் மூலம் மேற்கொள்ளப்பட்டு கொண்டிருக்கிறது.