தூத்துக்குடியில் ஊரடங்கை அமல்படுத்த போலீசார் தீவிர நடவடிக்கை

தூத்துக்குடியில் ஊரடங்கை அமல்படுத்த போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.;

Update:2020-04-25 04:00 IST
தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த ஊரடங்கு காரணமாக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். அமைப்புசாரா தொழிலாளர்கள், மற்றும் தொழிற்சாலைகளில் பணியாற்றி வரும் தொழிலாளர்கள் பலரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

அதே போன்று ஊரடங்கு காலத்தில் சுகாதாரத்துறையினர், வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் உள்ளிட்டவர்கள் முழுநேர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஊரடங்கால் பாதிக்கப்பட்டு உள்ள மக்களுக்கு தன்னார்வலர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் மூலம் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. பல மனிதாபிமானம் மிக்க போலீசார் தங்கள் சொந்த செலவிலும் நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர்.

வழக்கு பதிவு

இந்த நிலையில் தொடர்ச்சியான ஊரடங்கை மீறி சிலர் அத்தியாவசிய தேவைகள் இன்றி வாகனங்களில் சுற்றித்திரிகின்றனர். அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து வருகின்றனர். அதன்படி நேற்றும் மாவட்டத்தின் பல இடங்களிலும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, வந்த ஒவ்வொரு வாகனத்தையும் போலீசார் வழிமறித்து, விவரங்களை கேட்டனர். அத்தியாவசிய பணி இல்லாமல் வெளியில் வந்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர்.

அதே நேரத்தில் போலீசாரின் தொடர்ச்சியான பணி காரணமாக மன உளைச்சலுக்கு ஆளாகி சில விரும்பத்தகாத சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. தூத்துக்குடியில் நேற்று உணவுக்காக காத்திருந்த பொதுமக்களை போலீசார் விரட்டுவது போன்ற வீடியோவும் சமூகவலைதளங்களில் பரவி வருகிறது. இதுபோன்ற நிகழ்வுகளால் போலீஸ் துறைக்கு ஏற்படும் அவப்பெயரை தடுக்க போலீஸ் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மேலும் செய்திகள்