‘ட்ரோன்’ கேமரா மூலம் கண்காணிப்பு: கிரிக்கெட் விளையாடிய இளைஞர்களை விரட்டிய போலீசார் - சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது
வேலூரில் ஊரடங்கு உத்தரவை பின்பற்றாமல் கிரிக்கெட் விளையாடிய இளைஞர்களை ‘ட்ரோன்’ கேமரா மூலம் போலீசார் கண்காணித்து தெறிக்க விட்ட சம்பவம் வாட்ஸ்-அப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வேலூர்,
வேலூர் புதிய பஸ்நிலையம் அருகே பாலாற்றின் ஓரத்தில் ஊரடங்கை பின்பற்றாமல் இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடி கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு செல்வதற்கு சரியான சாலை வசதி இல்லாததால் போலீசார் ‘ட்ரோன் ’கேமரா மூலம் அவர்கள் யார் என்பதை கண்டறிய முடிவு செய்தனர். தொடர்ந்து உடனடியாக போலீசார் பாலாற்று புதிய மேம்பாலத்தில் இருந்து ட்ரோன் கேமராவை கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த இடத்தை நோக்கி இயக்கினர். அதனை கண்டதும் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்கள் ஸ்டெம்ப், பால், பேட் உள்ளிட்டவற்றை அங்கேயே விட்டு, விட்டு தலை தெறிக்க ஓட்டம் பிடித்தனர். சிலர் அருகே உள்ள தென்னைமர தோப்பிற்கும், மற்றவர்கள் வீட்டை நோக்கியும் ஓட்டம் பிடித்தனர். இதனை வீடியோவாக வெளியிட்டுள்ளனர்.
தொடர்ந்து அதே வீடியோவில் கொணவட்டத்தில் உள்ள மைதானத்தில் கிரிக்கெட் விளையாடும் இளைஞர்கள் ட்ரோன் கேமராவை பார்த்ததும் அங்கிருந்து ஓடுகின்றனர். அதில் 2 பேர் கேமராவின் பார்வையில் இருந்து தப்பிக்க அங்கிருந்த கால்பந்து கோல் வளைய இரும்பு கம்பியின் பின்னால் நின்று முகத்தை மறைக்க முயன்றனர். ஆனால் அவர்களை கேமரா தொடர்ந்து படம் பிடித்தது. அதனால் வேறு வழியின்றி 2 பேரும் அங்கிருந்து ஓட்டம் பிடித்து அருகே நின்றுகொண்டிருந்த ஸ்கூட்டியின் பின்னால் மறைந்து கொண்டனர். மேலும் சிலர் கேமராவின் பார்வையில் இருந்து தப்பித்தால் போதும் என்று மைதான சுற்றுச்சுவர் ஏறி குதித்து வெளியே ஓட்டம் பிடித்தனர்.
தொடர்ந்து தனித்திரு, விலகி இரு, வீட்டில் இரு. வீதியில் திரிந்தால், வீட்டிற்கு வரும் கொரோனா என்ற விழிப்புணர்வு வாசகத்துடன் அந்த வீடியோ முடிவடைகிறது. சுமார் 1 நிமிடம் 48 நொடிகள் ஓடும் இந்த வீடியோவில் காமெடி நடிகர் வடிவேலுவின் பல்வேறு நகைச்சுவை வசனத்தை ஆடியோவாக இணைத்து போலீசார் வெளியிட்டுள்ளனர்.
கிரிக்கெட் விளையாடிய இளைஞர்களை ட்ரோன் கேமரா மூலம் வேலூர் மாவட்ட போலீசார் தெறிக்க விடும் வீடியோவை வேலூர் உள்பட பல்வேறு மாவட்ட இணையவாசிகள் கண்டு ரசித்து வருகிறார்கள்.