போதிய விலை கிடைக்காததால் அறுவடை செய்யப்படாத பிளம்ஸ் பழங்கள்
ஊரடங்கு காரணமாக போதிய விலை கிடைக்காததால், மரங்களில் பிளம்ஸ் பழங்கள் அறுவடை செய்யப்படாமல் உள்ளன.
குன்னூர்,
நீலகிரி மாவட்டத்தில் ஏற்பட்ட தேயிலை விலை வீழ்ச்சியை ஈடுகட்ட மாற்று பயிர் சாகுபடி மேற்கொள்ள அறிவுரை வழங்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக பழ சாகுபடியும் அறிமுகப்படுத்தப்பட்டது. நீலகிரியில் பிளம்ஸ், பேரிக்காய், பிச் போன்ற பழ வகைகள் சாகுபடி செய்யப்பட்டன. சீசனுக்கு ஏற்ப விளையும் பழங்களை விற்பனை செய்து விவசாயிகள் வருமானம் ஈட்டி வருகின்றனர். இங்கு விளையும் பழங்களில் ஒன்றான பிளம்ஸ் பழத்தில் இனிப்பு பிளம்ஸ், ரூபி பிளம்ஸ் உள்பட 8 வகைகள் உள்ளன. இதில் இனிப்பு பிளம்ஸ், ரூபி பிளம்ஸ் அதிகளவில் பயிரிடப்படுகிறது.
ஆண்டுதோறும் பிளம்ஸ் பழத்தின் அறுவடை சீசன் ஏப்ரல் மாதம் முதல் மே மாதம் முதல் வாரம் வரை இருக்கும். ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், வாகன போக்குவரத்துக்கு தடை உள்ளது. மேலும் குன்னூர் மார்க்கெட்டும் மூடப்பட்டு உள்ளது. இதனால் அறுவடை செய்யப்படும் பிளம்ஸ் பழத்திற்கு போதிய விலை கிடைக்காத நிலை காணப்படுகிறது. அதன் காரணமாக விவசாயிகள் பழங்களை அறுவடை செய்யாமல் மரத்திலேயே விட்டு உள்ளனர். இதுகுறித்து குன்னூரை சேர்ந்த விவசாயி கோபி கூறியதாவது:-
நீலகிரி மாவட்டத்தை பொருத்தவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பிளம்ஸ், பேரிக்காய் போன்ற பழ சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆண்டுதோறும் இங்கு அறுவடை செய்யப்படும் பழங்களை சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி, உள்ளூர் மக்களும் விரும்பி வாங்கி செல்வார்கள். சுற்றுலா தலங்கள் மூடப்பட்டு சுற்றுலா பயணிகள் வருகை முற்றிலும் இல்லாமல் உள்ளது. இதனால் பழங்களை அறுவடை செய்தாலும், விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டு இருக்கிறது.
கடந்த ஆண்டு பிளம்ஸ் ஒரு கிலோ ரூ.70 முதல் ரூ.100 வரை விற்பனை ஆனது. அப்போது வியாபாரிகள் விளைநிலங்களுக்கே வந்து வாங்கி சென்றனர். தற்போது ஊரடங்கு உத்தரவால் கிலோ ரூ.20-ல் இருந்து ரூ.30 வரை மட்டுமே விலை போகிறது.
வியாபாரிகள் வந்து கொள்முதல் செய்வது இல்லை. அறுவடை செலவு அதிகரித்து நஷ்டம் ஏற்படுவதால், பிளம்ஸ் பழங்கள் அறுவடை செய்யாமல் மரங்களிலேயே விடப்படும் நிலை உள்ளது. இந்த பழங்கள் பறவைகள், அணில் போன்றவற்றிற்கு உணவாக இருப்பதுடன், பழுத்து கீழே விழுந்து வீணாகி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.