கூடலூர் அருகே, வனப்பகுதியோர கிராமங்களில் முகாமிட்டுள்ள காட்டுயானைகள் - பொதுமக்கள் பீதி
கூடலூர் அருகே வனப்பகுதியோர கிராமங்களில் காட்டுயானைகள் முகாமிட்டுள்ளதால் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர்.
கூடலூர்,
கூடலூர் பகுதியில் கோடை வறட்சி கடுமையாக உள்ளது. இதனால் பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். மேலும் நீர்நிலைகள் வறண்டு விட்டதாலும், போதிய பசுந்தீவனம் கிடைக்காததாலும் காட்டுயானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் ஊருக்குள் அதிகளவு வரத்தொடங்கி உள்ளன. கூடலூர் அருகே நாடுகாணி பகுதியில் அடர்ந்த வனம் இருக்கிறது. இதன் கரையோரம் பல்வேறு கிராமங்கள் உள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்பு காட்டுயானைகள் கூட்டமாக ஊருக்குள் வந்தன.
அப்போது நாடுகாணி பொன்னூர் பகுதியில் உள்ள அரசு தோட்டக்கலை பண்ணைக்குள் இரவில் புகுந்து, ஆயிரத்துக்கும் மேற்பட்ட தேயிலை நாற்றுகளை மிதித்து நாசம் செய்தன. தொடர்ந்து 200-க்கும் மேற்பட்ட காபி நாற்றுகள், பாகற்காய் கொடிகளை சேதப்படுத்தின. இதேபோல் அடிக்கடி பண்ணைக்குள் புகுந்து விற்பனைக்காக வைத்திருந்த நாற்றுக்களை காட்டுயானைகள் சேதப்படுத்தி வருகின்றன. மேலும் ஊருக்குள் புகுந்து தென்னை, பாக்கு உள்ளிட்ட விவசாய பயிர்களை தின்கின்றன. இதுகுறித்து வனத்துறையினர் நேரில் வந்து காட்டுயானைகளை விரட்டினாலும் தற்காலிகமாக அங்கிருந்து செல்கின்றன. பின்னர் மீண்டும் ஊருக்குள் வந்து முகாமிடுகின்றன. மேலும் இரவில் மக்களின் வீடுகளை முற்றுகையிடுகின்றன.
அங்கு காட்டுயானைகள் முகாமிட்டு உள்ளதால் உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ என்ற பீதியில் உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து உள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, காட்டு யானைகள் ஊருக்குள் அடிக்கடி வருவதால் நிம்மதியாக வாழ முடியவில்லை.
எந்த நேரத்தில் தாக்குமோ என்ற அச்சத்தில் இருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே யானைகள் ஊருக்குள் வராமல் தடுக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
இது தொடர்பாக வனத்துறையினரிடம் கேட்டபோது, காட்டுயானைகள் உணவுக்காக பல்வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்து செல்வது வழக்கம்.
இதனால் ஊருக்குள் நுழைந்த யானைகளை கண்காணிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளோம். பொதுமக்களும் யானைகளின் நடமாட்டம் குறித்து வனத்துறைக்கு தகவல் கொடுத்து ஒத்துழைக்க வேண்டும் என்றனர்.