ஓரம் கட்டப்பட்ட சைக்கிள்களுக்கு மீண்டும் ‘மவுசு’
போலீஸ் நடவடிக்கையில் இருந்து தப்பிப்பதற்காக சைக்கிள்களுக்கு மீண்டும் மவுசு ஏற்பட்டு உள்ளது.
திருச்சி,
போலீஸ் நடவடிக்கையில் இருந்து தப்பிப்பதற்காக சைக்கிள்களுக்கு மீண்டும் மவுசு ஏற்பட்டு உள்ளது.
வாழ்க்கை மாற்றம்
பூகம்பம், புயல், மழை போன்ற இயற்கை சீற்றங்களின்போது மனித வாழ்க்கையே தலைகீழாக மாறிப்போவது உண்டு. வசதி படைத்தவர்களை கூட அனைத்தையும் இழந்து நடுத்தெருவில் நிறுத்திவிடும் சக்தி இதுபோன்ற பேரிடர்களுக்கு தான் உண்டு என்பதுபோல் கொரோனா வைரஸ் மனிதனின் வாழ்க்கையை மாற்றி அமைத்து வருகிறது.
கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஊரடங்கை மீறி சாலையில் நடமாடக்கூடாது என்றாலும் மருந்து, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக மட்டும் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை வெளியில் வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது.
சைக்கிள் பயணம்
அனுமதிக்கப்படும் நேரத்திலும் வீட்டிற்கு ஒருவர் தான் வெளியில் வரவேண்டும். அதுவும் தங்களது வீட்டின் அருகில் உள்ள தற்காலிக காய்கறி சந்தை அல்லது மளிகை கடையில் தான் பொருட்களை வாங்கி கொள்ளவேண்டும். சுமார் 2 கி.மீ. சுற்றளவை தாண்டி செல்லக்கூடாது என்பது மாவட்ட கலெக்டரின் கண்டிப்பான உத்தரவு. இந்த உத்தரவை மீறி தேவை இல்லாமல் இருசக்கர வாகனங்களில் சுற்றி திரிபவர்களை போலீசார் கைது செய்து வருகிறார்கள். அவர்களது வாகனங்களும் பறிமுதல் செய்யப்படுகிறது. போலீஸ் நடவடிக்கையில் இருந்து தப்பிப்பதற்காக தற்போது சைக்கிளில் செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
திடீர் மவுசு
இதனால் இதுவரை வீட்டு வளாகத்தின் ஒரு பகுதியில் ஓரம் கட்டி வைக்கப்பட்டிருந்த சைக்கிள்களுக்கு தற்போது மவுசு கூடி உள்ளது. காய்கறிகள் வாங்குவதற்காக மக்கள் அதிக அளவில் சைக்கிள் பயணத்தையே மேற்கொண்டு வருகிறார்கள்.
இன்னொரு புறம், உடற்பயிற்சி கூடங்கள் மூடப்பட்டு விட்டதாலும், நடைபயிற்சிக்கு தடை விதிக்கப்பட்டு விட்டதாலும் சைக்கிள் ஓட்டுவதன் மூலம் உடற்பயிற்சி செய்வதின் பலன் கிடைக்கிறது என்பதாலும் மீண்டும் சைக்கிள் பக்கம் மக்களின் பார்வை திரும்பி உள்ளது.