குமரி மாவட்டத்தில் மழை: முக்கடல் அணையில் தண்ணீர் குறைந்தால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுமா? அதிகாரி விளக்கம்
குமரி மாவட்டத்தில் மழை பெய்து வருகிறது. இருப்பினும் நாகர்கோவில் நகருக்கு குடிநீர் வழங்கும் முக்கடல் அணையில் தண்ணீர் இருப்பு குறைவால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுமா? என்பது குறித்து மாநகராட்சி அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் மழை பெய்து வருகிறது. இருப்பினும் நாகர்கோவில் நகருக்கு குடிநீர் வழங்கும் முக்கடல் அணையில் தண்ணீர் இருப்பு குறைவால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுமா? என்பது குறித்து மாநகராட்சி அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.
52 ஆயிரம் குடிநீர் இணைப்பு
நாகர்கோவில் மாநகராட்சி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் அணையாக பூதப்பாண்டி அருகில் உள்ள முக்கடல் அணை இருந்து வருகிறது. மேலும் வழியோர கிராமங்களுக்கும், சுசீந்திரம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் இந்த அணைதான் குடிநீர் ஆதாரமாக இருந்து வருகிறது.
இந்த அணையின் நீர்மட்டம் 25 அடியாகும். அணையின் தரைமட்டத்துக்கு கீழே 20 அடி வரையிலும் குடிநீருக்கு தண்ணீர் எடுக்க முடியும். இதுதான் இந்த அணையின் சிறப்பம்சமாகும். நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் 3 லட்சத்து 21 ஆயிரம் மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த மக்களுக்கு 52 ஆயிரம் வீட்டு குடிநீர் இணைப்புகள் உள்ளன.
குமரியில் மழை
இந்தநிலையில் முக்கடல் அணையில் தண்ணீர் இருப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி 3 அடியாக குறைந்துள் ளது. அதேநேரத்தில் தினமும் இந்த அணையில் இருந்து 7.50 கன அடி தண்ணீர் குடிநீருக்காக எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே கடந்த சில நாட்களாக குமரி மாவட்டத்தில் மழை பெய்து வருகிறது. நேற்று பிற்பகலிலும் நாகர்கோவில் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.
நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் குமரி மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் (மி.மீ) வருமாறு:-
பேச்சிப்பாறை 16, பெருஞ்சாணி 8.4, புத்தன் அணை8, சிற்றார்-1 19.4, சிற்றார்-2 8.2, குழித்துறை 8.2, சுருளக்கோடு 18.2, பாலமோர் 2.4, மாம்பழத்துறையாறு 76, ஆரல்வாய்மொழி 4, கோழிப்போர்விளை 6, அடையாமடை 24, முள்ளங்கினாவிளை 7, ஆனைக்கிடங்கு 67.4, முக்கடல் அணை 4.2 என்ற அளவில் பதிவாகி இருந்தது.
சேமிக்கிறார்கள்
இதனால் அணைகளுக்கு தண்ணீர் வரத்து இருந்து வருகிறது. மேலும் ஆறுகள், வாய்க்கால்களிலும் தண்ணீர் ஓடுகிறது. தற்போது பாசனத்துக்கு தண்ணீர் தேவை இல்லாததால் அணைகளில் இருந்து வரும் தண்ணீர் மற்றும் வாய்க்கால்களில் பாய்ந்தோடும் தண்ணீரை மாநகராட்சி அதிகாரிகள் முக்கடல் அணைக்கு திருப்பி சேமித்து வருகிறார்கள்.
எனவே மழை பெய்யாமல் போனால் முக்கடல் அணையில் உள்ள தண்ணீரை வைத்து கோடை காலத்தை சமாளிக்க முடியுமா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாநகராட்சி என்ஜினீயர் பாலசுப்பிரமணியனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
ஒரு நபருக்கு 130 லிட்டர்
தற்போது மழை பெய்து வருவதாலும், வாய்க்க ால்களில் வந்து கொண்டிருக்கும் தண்ணீரை அணையில் ஏற்றி வருகிறோம். அதனால் 3 மாதத்துக்கு தேவையான தண்ணீர் அணையில் இருக்கிறது. எனவே தட்டுப்பாடு ஏற்படாது. வழக்கம்போல் குடிநீர் வினியோகம் செய்யப்படும். மேலும் மழையும் பெய்து வருகிறது. எனவே விரைவில் அணை நிரம்பிவிடும்.
தற்போது நாகர்கோவில் மாநகராட்சியில் 52 ஆயிரம் குடிநீர் இணைப்புகள் உள்ளன. புத்தன் அணை குடிநீர்த் திட்டம் டிசம்பர் மாதம் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதன்மூலம் மேலும் 50 ஆயிரம் குடிநீர் இணைப்புகள் கொடுக்கலாம். தற்போது நாள் ஒன்றுக்கு ஒரு நபருக்கு 93 லிட்டர் தண்ணீர் கொடுத்து வருகிறோம். புதிய குடிநீர் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் நாள் ஒன்றுக்கு நபர் ஒருவருக்கு 130 லிட்டர் தண்ணீர் கொடுக்கலாம்.
தினமும் குடிநீர்
கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் நாகர்கோவிலில் தடை செய்யப்பட்ட டென்னிசன் ரோடு, வெள்ளாடிச்சிவிளை ஆகிய பகுதி மக்கள் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். குடிநீர் இன்றி அவர்கள் தவிக்கக்கூடாது என்பதற்காக இந்த 2 பகுதி மக்களுக்கும் தினமும் குடிநீர் வழங்கி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.