ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் பரிசோதனை: கொரோனா அறிகுறியுடன் இருந்த போலீஸ்காரர் தப்பி ஓட்டம் காரில் சென்ற போது நாங்குநேரியில் சிக்கினார்

ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா அறிகுறியுடன் இருந்த போலீஸ்காரர் தப்பி ஓடினார். காரில் சென்ற போது நாங்குநேரியில் சிக்கினார்.

Update: 2020-04-24 01:42 GMT
நாகர்கோவில், 

ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா அறிகுறியுடன் இருந்த போலீஸ்காரர் தப்பி ஓடினார். காரில் சென்ற போது நாங்குநேரியில் சிக்கினார்.

போலீஸ்காரர்

சேலம் மாவட்டம் அஸ்தம்பட்டியில் உள்ள சிறப்பு காவல் படையில் போலீஸ்காரராக 24 வயது மதிக்கத்தக்க வாலிபர் பணியாற்றி வருகிறார். அவருக்கு குமரி மாவட்டத்தில் பணி ஒதுக்கீடு செய்திருந்ததாக கூறப்படுகிறது. நேற்று சேலத்தில் இருந்து அவர் தனது காரில் புறப்பட்டு நாகர்கோவில் வந்தார்.

உறவினர்கள் 3 பேரும் வந்திருந்தனர். பின்னர் அவர் நாகர்கோவில் மறவன்குடியிருப்பில் உள்ள ஆயுதப்படைக்கு பணியில் சேர வந்தார். வெளி மாவட்டத்தில் இருந்து அவர் வருவதால் அவரை ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்து கொள்ள மாலை 4 மணிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அதன்படி ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் பரிசோதனைக்காக அவருடைய சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டது. அப்போது அவருக்கு கொரோனா அறிகுறிகளான சளி, இருமல் போன்றவை இருந்ததால் அவரை அங்குள்ள தனிமைப்படுத்தும் வார்டில் தங்குமாறு டாக்டர்கள் கூறினர்.

நழுவினார்

ஆனால் அவர் நைசாக அங்கிருந்து நழுவி, தான் வந்த காரிலேயே உறவினர்களுடன் சேலம் நோக்கி புறப்பட்டார். இதையறிந்த டாக்டர்கள் உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் அந்த போலீஸ்காரரை தேடி பார்த்தனர். அவர் கிடைக்கவில்லை.

தப்பி ஓட்டம்

அதன்பிறகு தான் அவர் தான் வந்த காரிலேயே தப்பிச் சென்றது தெரிய வந்தது. உடனே உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வாக்கி டாக்கி மூலம் மாவட்டம் முழுவதும் போலீசாரை உஷார்படுத்தினர். சோதனைச்சாவடிகளின் போலீசாரும் உஷார்படுத்தப்பட்டனர். ஆனால், அதற்குள் அந்த போலீஸ்காரரும், உறவினர்களும் காரில் குமரி மாவட்ட எல்லையை கடந்து நெல்லை மாவட்டத்துக்குள் சென்று விட்டனர்.

நெல்லை மாவட்ட போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதே சமயத்தில், குமரி மாவட்ட போலீசாரும் போலீஸ்காரர் சென்ற காரை துரத்திச் சென்றனர். நாங்குநேரி பகுதிக்கு சென்ற போது, அங்கு நெல்லை மாவட்ட போலீசார் உதவியுடன் குமரி மாவட்ட போலீசார் அந்த காரை மடக்கினர்.

பரபரப்பு

பின்னர் காரில் இருந்த 4 பேரையும் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரி தனிமைப்படுத்தும் வார்டில் சேர்த்தனர். இதன் பிறகு போலீஸ்காரருடன் வந்த 3 பேருக்கும் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியிலும், குமரியையொட்டி உள்ள நெல்லை மாவட்ட பகுதியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்