விழுப்புரம் மாவட்டத்தில், மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு - குணமடைந்த 6 பேர் வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர்
விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. குணமடைந்த 6 பேர் வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றால் இதுவரை 41 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஏற்கனவே 2 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். 19 பேர் குணமடைந்தனர். மீதமுள்ள 20 பேரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்நிலையில் நேற்று 133 பேரின் மருத்துவ பரிசோதனை அறிக்கைகள் வரப்பெற்றது. இவர்களில் 47 வயதுடைய ஆண் ஒருவருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர் திண்டிவனம் நகர பகுதியை சேர்ந்தவர் ஆவார்.
இதையடுத்து அவர், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இவரோடு சேர்த்து விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது. மற்ற 132 பேருக்கும் நோய் தொற்று இல்லை என தெரியவந்தது.
இதனிடையே முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரியில் கொரோனாவினால் சிகிச்சை பெற்று வந்தவர்களில் நேற்று 6 பேர் பூரண குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை 2,078 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 42 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,967 பேருக்கு நோய் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டு அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 69 பேரின் மருத்துவ பரிசோதனை அறிக்கையின் முடிவுகள் இன்னும் வரவில்லை. மேலும் மாவட்டத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை தொடர்பாக 1,550 பேர் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என்று தெரிவித்தனர்.