கொரோனா பரவலை தடுக்க கிராமப்புறங்களில் பிரதான சாலைகள் மூடல் - தண்டோரா மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை

கொரோனா பரவலை தடுக்க கிராமப்புறங்களில் பிரதான சாலைகள் மூடப்பட்டுள்ளது. மேலும் தண்டோரா மூலமும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

Update: 2020-04-23 23:00 GMT
விழுப்புரம், 

தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 1,600-க்கும் மேற்பட்டோர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 41 பேர் இந்நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் வசிக்கும் பகுதிகள் மட்டுமின்றி சுற்றிலும் 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பகுதிகளையும் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு அந்த பகுதிகளில் உள்ள பொதுமக்கள் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

குறிப்பாக விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 30 பேர் விழுப்புரம் நகர பகுதியை சேர்ந்தவர்கள் என்பதாலும், விழுப்புரம் நகரில் மக்கள் நடமாட்டத்தை குறைக்கும் வகையிலும் விழுப்புரத்தை சுற்றியுள்ள பல்வேறு கிராமப்புறங்களை சேர்ந்த பொதுமக்கள் விழுப்புரம் நகரத்திற்குள் வர காவல்துறை சார்பில் ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கிராமப்புறங்களிலும் இந்நோய் தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் மாவட்ட கலெக்டர் அண்ணாதுரையின் உத்தரவின்படி பிரதான சாலைகளை மூடும் விதமாக அந்த சாலைகளில் போலீசார் மூலம் தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகிறது.

மேலும் ஒரு கிராமத்தை சேர்ந்தவர்கள் பக்கத்து கிராமத்திற்கு செல்வதை தவிர்க்கும் வகையிலும், கொரோனாவின் தாக்கம் குறித்தும் கிராமங்கள்தோறும் தண்டோரா மூலம் பொதுமக்களிடம் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ஏற்கனவே வேளாண்மைத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் கிராமங்கள்தோறும் நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறிகள், மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. எனவே பொதுமக்கள் யாரும் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வராமல் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்றனர்.

மேலும் செய்திகள்