நெல்லை கொரோனா நிவாரண மையத்தில் ‘ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படத்தை பார்த்து ரசித்த ஆதரவற்றோர்கள்

நெல்லை கொரோனா நிவாரண மையத்தில் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் திரையிடப்பட்ட ‘ஆயிரத்தில் ஒருவன்‘ திரைப்படத்தை ஆதரவற்றோர்கள் கண்டு ரசித்தனர்.

Update: 2020-04-24 00:19 GMT
நெல்லை, 

நெல்லை கொரோனா நிவாரண மையத்தில் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் திரையிடப்பட்ட ‘ஆயிரத்தில் ஒருவன்‘ திரைப்படத்தை ஆதரவற்றோர்கள் கண்டு ரசித்தனர்.

நிவாரண மையம்

கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் அவசர உலகில் ஆங்காங்கே கடைகள், பொது மக்களிடம் உணவு மற்றும் பணம் பெற்று வாழ்க்கையை ஓட்டி வந்த ஆதரவற்றோர்கள், லேசாக மனநலம் பாதிக்கப்பட்டோர் செய்வதறியாமல் தவித்தனர். சாலையோரம் கடைகளின் முன்பு உள்ள திண்ணைகளில் படுத்து கிடந்தனர். சிலர் சாலைகளில் அங்குமிங்கும் சுற்றித்திரிந்தனர்.

நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா உத்தரவுப்படி மாநகராட்சி ஆணையாளர் கண்ணன், தன்னார்வ தொண்டு நிறுவன தலைவர் சரவணன் ஆகியோர் தலைமையில் தன்னார்வலர்கள், ஆதரவற்றோர்களை அடையாளம் கண்டு மீட்டனர். இவ்வாறு 105 பேர் மீட்கப்பட்டு நெல்லை டவுன் கல்லணை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டு உள்ள கொரோனா நிவாரண மையத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

திரைப்படம்

அவர்களுக்கு மாநகராட்சி மற்றும் தொண்டு நிறுவனங்கள் சார்பில் 3 வேளை சாப்பாடு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் அவர்களின் மன அழுத்தத்தை போக்கவும், நல்வழி படுத்தவும் பல்வேறு பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நிவாரண முகாமில் தங்கி உள்ள 105 பேரும் கண்டுகளிக்கும் வகையில் அங்குள்ள திறந்தவெளி கலையரங்கில் பழைய திரைப்படங்களை ஔிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நடித்த ‘ஆயிரத்தில் ஒருவன்‘ திரைப்படம் நேற்று முன்தினம் இரவு திரையிடப்பட்டது.

ஆதரவற்றோர்கள் அங்கு போடப்பட்டிருந்த பெஞ்சுகளில் சமூக இடைவெளி விட்டு, அதாவது ஒரு பெஞ்சுக்கு 2 பேர் வீதம் அமர்ந்து திரைப்படத்தை பார்த்து ரசித்தனர். இந்த நடவடிக்கை ஆதரவற்றோருக்கு மிகவும் ஆறுதலாகவும், அவர்களின் மன அழுத்தத்தை குறைக்க சரியான ஏற்பாடு என்றும் அனைவரும் பாராட்டினர்.

மேலும் செய்திகள்