பட்டரின் தாயாருக்கு கொரோனா: மீனாட்சி அம்மன் கோவிலில் பணியாற்றும் 100 பேருக்கு மருத்துவ பரிசோதனை
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பட்டரின் தாயாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், கோவிலில் பணியாற்றும் மற்ற பட்டர்கள், பணியாளர்கள், போலீஸ்காரர்கள் என 100-க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவ பரிசோதனை நடந்தது. கோவிலில் பூஜைகள் வழக்கம்போல் நடந்தன.
மதுரை,
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பட்டர் ஒருவரின் தாயாருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்ததால் அவர், மதுரை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா வார்டில் நேற்று அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் அவரது குடும்பத்தினர், அவர் வசிக்கும் வீட்டின் அருகே வசிப்பவர்கள் அனைவரையும் சுகாதாரத்துறையினர் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்தனர். அது தவிர அவர்கள் தங்கியிருந்த பகுதிகளில் சுற்றியுள்ள அனைத்து தெருக்களும் சீல் வைத்து அடைக்கப்பட்டன. அந்த பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, சுகாதாரத்துறையினர் மூலம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் அந்த பட்டர் கடந்த 12-ந் தேதி வரை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்து சென்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. அதனை தொடர்ந்து கோவிலில் பணியாற்றும் பட்டர்கள், பணியாளர்கள், ஊழியர்கள், பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர்கள் என அனைவருக்கும் பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டது.
உடனே அவர்கள் அனைவரும் கோவில் பகுதிக்கு வருமாறு அழைக்கப்பட்டனர். இதற்கிடையில் கோவில் முழுவதும் சுகாதார பணியாளர்களால் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. அதை தொடர்ந்து சுமார் 60 பட்டர்கள், பணியாளர்கள், போலீஸ்காரர்கள் என 100-க்கும் மேற்பட்டவர்கள் வந்தனர். அவர்கள் அனைவரையும் கோவிலுக்கு வெளியே கிழக்கு சித்திரை வீதியில் மருத்துவ பரிசோதனைக்காக வரிசையாக நிறுத்தினர். பின்னர் மருத்துவக்குழுவினர் ஒவ்வொருவராக பரிசோதனை செய்தனர். அவர்களது அனைவரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. இதனால் மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுஒருபுறம் இருக்க நேற்று மாலையில் இருந்து இரவு வரை அனைத்து பூஜைகளும் கோவிலில் வழக்கம் போல் நடந்தன. இது குறித்து பட்டர் ஒருவர் கூறியதாவது:-
கொரோனா தொற்றுக்கு ஆளான மூதாட்டியின் மகனான பட்டரிடம் பாஸ்போர்ட்டு கிடையாது. அவர் வெளியூருக்கு கூட செல்லமாட்டார். கடந்த 12-ந் தேதி கோவிலுக்கு வந்த அவர், அதன்பின்னர் கோவிலுக்குள் வரவில்லை. மேலும் மற்ற பட்டர்களும் தினமும் கோவிலுக்குள் வருவதில்லை. பூஜை முறைகள் உள்ள பட்டர்கள் மட்டும் தான் கோவிலுக்கு வந்து பூஜைகளை செய்கின்றனர். எங்களில் 3 பட்டர்கள் மட்டும் வெளிநாடு சென்று வந்துள்ளனர். அவர்களும் சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தலின்படி 21 நாட்கள் தங்களை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டனர். சுகாதாரத்துறையினர் வந்து பரிசோதனை செய்த பின்னர்தான் வெளியே வந்தனர்.
பாதிக்கப்பட்டவருக்கு எப்படி கொரோனா வந்தது என்பது எங்களுக்கு தெரியவில்லை. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா 25-ந் தேதி (நாளை) கொடியேற்றத்துடன் தொடங்க இருந்தது. இந்த நிலையில் கொரோனா தொற்று, ஊரடங்கு காரணமாக திருவிழா ரத்து செய்யப்பட்டது. மேலும் பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்கவும், ஆகம விதிப்படியும் வருகிற 4-ந்தேதி திருக்கல்யாணம் மட்டும் நடத்தப்பட இருந்தது. தற்போது உள்ள சூழ்நிலையில் திருக்கல்யாணம் குறித்து அரசு தான் முடிவு எடுக்கும். எது எப்படி இருந்தாலும் கோவிலில் செய்ய வேண்டிய அனைத்து பூஜைகளும் தினமும் தொடர்ந்து நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.