மராட்டியத்தில் ஒரே நாளில் 778 பேருக்கு கொரோனா: பாதித்தோர் எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டியது - மேலும் 14 பேர் உயிரிழப்பு

மராட்டியத்தில் ஒரே நாளில் 778 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, பாதித்தோர் எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டியது. மேலும் 14 பேர் பலியானதால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 283- ஆக உயர்ந்து உள்ளது.

Update: 2020-04-23 23:44 GMT
மும்பை, 

மராட்டியத்தில் கொரோனா பரவலை தடுக்க மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

எனினும் இங்கு கொரோனா அசுர வேகத்தில் பரவிவருகிறது. ஏறக்குறைய இங்கு கொரோனா சமூக பரவல் நிலையை எட்டிவிட்டது. அந்த அளவுக்கு மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

இந்தநிலையில் நேற்று மாநிலத்தில் புதிதாக 778 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதனால் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டி உள்ளது. அதாவது பாதிப்பு 6 ஆயிரத்து 427 ஆக உயர்ந்து உள்ளது.

283 பேர் பலி

மேலும் மாநிலத்தில் 14 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதில் 5 பேர் புனேயையும், தலா ஒருவர் நவிமும்பை, நந்துர்பர், துலே மாநகராட்சி பகுதியை சேர்ந்தவர்கள். இதனால் மாநிலத்தில் இதுவரை கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 283 ஆக உயர்ந்து உள்ளது.

இதேபோல மாநிலம் முழுவதும் இதுவரை 840 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர்.

மும்பையில் 4,205 ஆயிரம் பேர்

இதேபோல மாநில தலைநகர் மும்பையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இதில் புதிதாக 522 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் மும்பையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டர்கள் எண்ணிக்கை 4 ஆயிரத்து 205 ஆக உயர்ந்து உள்ளது.

மும்பையில் மேலும் 6 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதனால் இங்கு தொற்று நோய்க்கு பலியானவர்கள் எண்ணிக்கை 167 ஆக உயர்ந்து உள்ளது.

தானே, நவிமும்பை

இதேபோல மும்பையையொட்டி உள்ள தானே புறநகரில் இதுவரை 34 பேரும், தானே மாநகராட்சி பகுதியில் 214 பேரும், நவிமும்பை மாநகராட்சியில் 97 பேரும், கல்யாண்-டோம்பிவிலியில் 124 பேரும், உல்லாஸ்நகரில் 2 பேரும், பிவண்டி-நிசாம்பூரில் 8 பேரும், மிரா-பயந்தரில் 116 பேரும், பால்கர் புறநகரில் 21 பேரும், வசாய்-விராரில் 109 பேரும், ராய்காட்டில் 14 பேரும், பன்வெலில் 36 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல புனே மாநகராட்சியில் 812 பேரும் (59 பேர் பலி), பிம்பிரி-சிஞ்ச்வட் மாநகராட்சியில் 57 பேரும் (2 பேர் பலி) பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்