மூலப்பொருள் தட்டுப்பாட்டால் தீப்பெட்டி ஆலைகள் மீண்டும் முடங்கும் நிலை - அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட தொடங்கிய தீப்பெட்டி ஆலைகள் மூலப்பொருட்கள் தட்டுப்பாட்டால் மீண்டும் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு மூலப்பொருட்கள் கிடைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
விருதுநகர்,
விருதுநகர் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் தீப்பெட்டி தொழில், கிராமப்புற மக்களுக்கு வாழ்வாதாரம் வழங்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. விருதுநகர் மாவட்டத்தில் 320 சிறு தீப்பெட்டி ஆலைகள், பகுதியாக எந்திரமயமாக்கப்பட்ட தீப்பெட்டி ஆலைகள் உள்ளன. இந்த ஆலைகளில் பல்லாயிரக்கணக்கான கிராமப்புற மக்கள் வேலை செய்து வருகின்றனர். இதில் 80 சதவீதம் பெண்கள் ஆவர். தீப்பெட்டியின் தேவை கருதி தீப்பெட்டி ஆலைகள் செயல்பட மத்திய, மாநில அரசுகள் அனுமதி அளித்துள்ளது.
தீப்பெட்டி உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களான தீக்குச்சி கேரளாவில் இருந்தும், சிவப்பு பாஸ்பரஸ் புதுச்சேரியில் இருந்தும் வரவேண்டி உள்ளது. தீக்குச்சிகளை லாரியில் அனுப்பி வைக்குமாறு கேரள முதல்வரிடம் மாணிக்கம்தாகூர் எம்.பி.யும், தமிழக வருவாய்த்துறை நிர்வாக ஆணையரும் கேட்டுக்கொண்டதன் பேரில் அவர் அதற்கான உத்தரவை பிறப்பித்தார்.
இதேபோன்று சிவப்பு பாஸ்பரஸ் புதுச்சேரியில் இருந்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனாலும் இந்த மூலப்பொருட்கள் இன்னும் வந்து சேராத நிலை நீடிக்கிறது.
மத்திய, மாநில அரசுகள் அனுமதி அளித்த நிலையில் கையிருப்பில் உள்ள மூலப்பொருட்களை வைத்து தீப்பெட்டி ஆலைகளில் தீப்பெட்டி உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. ஆனால் கேரளா, புதுச்சேரியில் இருந்து மூலப்பொருட்கள் வருவதற்கு தாமதமாகி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் இந்த ஆலைகள் மீண்டும் முடங்கும் நிலைக்கு சென்றுள்ளன. இதனால் இந்த ஆலைகள் மூலம் வாழ்வாதாரம் பெற்றுள்ள கிராமப்புற மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது.
எனவே தமிழக அரசு, தீப்பெட்டி ஆலைகளுக்கு தேவையான மூலப்பொருட்கள் கேரள மாநிலத்தில் இருந்தும், புதுச்சேரியில் இருந்தும் உடனடியாக கிடைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. சரக்கு வாகன தட்டுப்பாட்டால் இப்பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகமும் செய்து தர முன்வர வேண்டும் என கோரப்பட்டுள்ளது.