திருக்காட்டுப்பள்ளி அருகே கொள்ளிடம் ஆற்றங்கரையில் பெண்ணின் எலும்புக்கூடு போலீசார் விசாரணை
திருக்காட்டுப்பள்ளி அருகே கொள்ளிடம் ஆற்றங்கரையில் பெண்ணின் எலும்புக்கூடு கிடந்தது. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருக்காட்டுப்பள்ளி,
திருக்காட்டுப்பள்ளி அருகே கொள்ளிடம் ஆற்றங்கரையில் பெண்ணின் எலும்புக்கூடு கிடந்தது. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
எலும்புக்கூடு
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே திருச்செனம்பூண்டி கிராமத்தில் உள்ள கொள்ளிடம் ஆற்றங்கரையில் நாணல் புதருக்கு இடையே எலும்புக்கூடு கிடப்பதாக தோகூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தகவலின்பேரில் திருவையாறு துணை போலீஸ் சூப்பிரண்டு புகழேந்தி, திருக்காட்டுப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் கென்னடி மற்றும் தடயவியல் நிபுணர்கள் அங்கு சென்று சோதனை செய்தபோது பெண்ணின் எலும்புக்கூடு கிடப்பது தெரியவந்தது.
கொலுசு-செருப்பு
அதன் அருகே கொலுசு, பெண்கள் அணியும் செருப்பு, சேலையின் ஒரு பகுதி கிடந்தது. இந்த எலும்புக்கூடு 30 வயது முதல் 40 வயது மதிக்கத்தக்க பெண்ணுக்குரியதாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இதுகுறித்து கிராம நிர்வாக அதிகாரி ஆனந்தன் தோகூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த பெண் யார்? ஆற்றங்கரை பகுதிக்கு ஏன் வந்தார்? கொலை செய்யப்பட்டு இறந்தாரா? என்பது பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.