வேப்பேரி போலீஸ் நிலையம் அருகே, துணிக்கடை ஊழியரிடம் மோட்டார் சைக்கிள் பறிப்பு
சென்னை வேப்பேரி போலீஸ் நிலையம் அருகே துணிக்கடை ஊழியரின் மோட்டார் சைக்கிளை 2 பேர் பறித்துச்சென்று விட்டனர். ஊர்க்காவல் படை வீரர்கள் என்று ஏமாற்றிய அவர்கள் இருவரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.
சென்னை,
சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 24). இவர் துணிக்கடை ஒன்றில் ஊழியராக வேலை செய்கிறார். இவரது தாயார் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவமனையில் ஊழியராக வேலை செய்கிறார். நேற்று முன்தினம் தனது தாயாரை மருத்துவமனையில் வேலைக்காக இறக்கி விட்ட பிரகாஷ், தனது மோட்டார் சைக்கிளில் வண்ணாரப்பேட்டைக்கு மீண்டும் சென்று கொண்டிருந்தார்.
சென்னை வேப்பேரி போலீஸ் கமிஷனர் அலுவலகம் அருகே 2 மர்மநபர்கள் பிரகாஷின் மோட்டார் சைக்கிளை வழிமறித்தனர். பிரகாஷ் மோட்டார் சைக்கிளை நிறுத்தினார். வழிமறித்த அவர்கள் தங்களை ஊர்க்காவல் படை வீரர்கள் என்றும், பணி முடிந்து வீடு செல்வதாகவும், வழியில் இறங்கி கொள்வதாகவும் தெரிவித்தனர். உடனே அவர்களை பிரகாஷ் தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டார்.
மோட்டார் சைக்கிள் பறிப்பு
ஒரே மோட்டார் சைக்கிளில் 3 பேர் சென்றதால் வேப்பேரி போலீஸ் நிலையம் அருகே அவர்களை போலீசார் வழிமறித்து விசாரித்தார்கள். பிரகாஷ் மோட்டார் சைக்கிளை விட்டு இறங்கி போலீசாரிடம் பேசிக்கொண்டு நின்றார். அந்த நேரத்தில் மற்ற இருவரும் பிரகாஷின் மோட்டார் சைக்கிளை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்று விட்டனர்.
இதை எதிர்பாராத பிரகாஷ் அதிர்ச்சி அடைந்தார். அவரும், போலீசாரும் சிறிது தூரம் விரட்டிச் சென்றனர். ஆனால் அவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்று விட்டனர்.
வலைவீச்சு
இதுதொடர்பாக பிரகாஷ் கொடுத்த புகார் அடிப்படையில், வேப்பேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில் தப்பிச்சென்ற இருவரும் ஊர்க்காவல் படை வீரர்கள் இல்லை என்று தெரிய வந்தது. அவர்கள் பழைய குற்றவாளிகளாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஊர்க்காவல்படை வீரர்கள் என்று ஏமாற்றி, மோட்டார் சைக்கிளை பறித்து சென்று விட்டனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.