மே மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் 27-ந் தேதி முதல் வழங்கப்படும் அமைச்சர் காமராஜ் பேட்டி

மே மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் 27-ந் தேதி(திங்கட் கிழமை) முதல் வழங்கப் படும் என அமைச்சர் காமராஜ் கூறினார்.

Update: 2020-04-23 22:30 GMT
மன்னார்குடி, 

மே மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் 27-ந் தேதி(திங்கட் கிழமை) முதல் வழங்கப் படும் என அமைச்சர் காமராஜ் கூறினார்.

பாதுகாப்பு உபகரணங்கள்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு உதவி பொருட்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி மன்னார்குடி நகராட்சியில் நடந்தது. நிகழ்ச்சிக்கு மன்னார்குடி உதவி கலெக்டர் புண்ணியகோட்டி, நகராட்சி ஆணையர் திருமலைவாசன், முன்னாள் நகரசபை தலைவர் சிவா.ராஜ மாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சிக்கு அமைச்சர் காமராஜ் தலைமை தாங்கி தூய்மை பணியாளர்களுக்கு அரிசி, பருப்பு, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் பொன்.வாசுகிராம், மன்னார்குடி மேற்கு ஒன்றிய செயலாளர் தமிழ்செல்வம், கூட்டுறவு நகர வங்கி தலைவர் ஆர்.ஜி.குமார், நகர அ.தி.மு.க. துணை செயலாளர் அன்புச்செல்வன், நகரசபை முன்னாள்துணைத்தலைவர் வரலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஒத்துழைப்பு தர வேண்டும்

பின்னர் அமைச்சர் காமராஜ், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் பாதிப்புகள் தமிழகத்தில் கட்டுக்குள் இருக்கிறது. தமிழக முதல்-அமைச்சரின் கடுமையான உழைப்பு, முயற்சி, முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாகவும், மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்றவற்றாலும் நாம் கொரோனாவுக்கு எதிராக வெற்றி பெற்றுக்கொண்டு இருக்கிறோம். மீதம் இருக்கிற நாட்களும் மக்கள் தொடர்ந்து ஒத்துழைப்பு தர வேண்டும்.

திருவாரூர் மாவட்டத்தை பொறுத்தவரை 28 பேருக்கு தொற்று ஏற்பட்டு உள்ளது. அதில் 8 பேர் குணம் அடைந்து விட்டனர். மியான்மர் நாட்டை சேர்ந்த ஒருவர் சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அனைவரும் நலமுடன் இருக்கின்றனர். தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை தமிழக அரசு எந்த தடையுமின்றி செய்து வருகிறது.

27-ந் தேதி முதல் வழங்கப்படும்

தமிழக முதல்-அமைச்சர் 2-வது கட்டமாக அறிவித்த மே மாதத்திற்கான அரிசி, சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் பெறுவதற்கு 24 மற்றும் 25-ந் தேதிகளில் (அதாவது இன்றும், நாளையும்) 2 நாட்கள் டோக்கன் வழங்கப்பட்டு அதில் குறிப்பிட்டுள்ள தேதியில் சமூக இடைவெளியை பின்பற்றி குறிப்பிட்ட நேரத்தில் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம்.

வருகிற 27-ந் தேதி(திங்கட்கிழமை) முதல் ரேஷன் கடைகள் மூலம் பொருட்கள் வழங்கப்படும். தமிழக முதல்-அமைச்சரின் உத்தரவின்படி மிகவும் நலிவுற்ற ஏழ்மையான குடும்பங்களுக்கு முதலிலும் பிறகு அனைவருக்கும் என நாள் ஒன்றுக்கு 150 பேருக்கு வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்