தாராபுரம் நகராட்சி ஊழியர்கள் குடும்பத்திற்கு அசைவ விருந்து - சமூக இடைவெளி எங்கே? பொதுமக்கள் கேள்வி

தாராபுரம் நகராட்சி சார்பில் ஊழியர்கள் மற்றும் தூய்மைப்பணியாளர்களுக்கு அசைவ விருந்து நடந்தது. 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் சமூக இடைவெளி இல்லாமல் முண்டியடித்து நின்றது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2020-04-23 23:30 GMT
தாராபுரம், 

உலக அளவில் வேகமெடுத்து பரவிக்கொண்டிருக்கிறது கொரோனா. இந்த தொற்று நோய் பரவலில் இருந்து தப்பிக்க மத்திய-மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. இருப்பினும் கொரோனா தொற்றுநோய் பரவுவது அதிகரித்த வண்ணம் உள்ளது.

எனவே, அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக கடைக்கு சென்றாலும், ரேஷன் வாங்க சென்றாலும் அங்கு அமைக்கப்பட்டுள்ள வட்டத்திற்குள் நின்று தங்களை தற்காத்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனை மாநகரம் முதல் கிராமங்கள் வரை உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் கொண்டு சேர்க்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்த நிலையில் கொரோனா பரவலை தடுக்க வேண்டிய அரசு அதிகாரிகளே சமூக இடைவெளியை காற்றில் பறக்கவிட்டு ஊழியர்கள், தூய்மைப்பணியாளர்களுக்கு அசைவ விருந்து நடத்திய சம்பவம் தாராபுரம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அது பற்றிய விவரம் வருமாறு:-

தாராபுரம் நகராட்சி ஆணையாளராக உள்ள சங்கர் நேற்று தூய்மைப்பணியாளர்களுக்கு கறிவிருந்து வழங்க உள்ளதாக தெரிவித்தார். இதற்காக 9 ஆடுகள், 80 பிராய்லர் கோழிகள், 350 முட்டை வாங்கி வரப்பட்டது. பின்னர் அதனை கொண்டு தாராபுரம் அரசு ஆஸ்பத்திரி அருகில் உள்ள நீரேற்று நிலையத்தில் வைத்து சமையல் நடைபெற்றது. விருந்துக்காக மட்டன் மற்றும் சிக்கன் பிரியாணி, சிக்கன் சில்லி, கறி குழம்பு என அனைத்தும் தயாரானது.

பின்னர் நகராட்சி ஊழியர்கள், தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் என 300-க்கும் மேற்பட்டோர் அங்கு வந்து குவிந்தனர். கைகழுவுவதற்கு சோப்பு கூட வைக்கப்படாததால் வெறும் தண்ணீரில் அவர்கள் தங்கள் கைகளை கழுவினர்.

தொடர்ந்து அங்கு தட்டுகளை கையில் ஏந்தியபடி உணவுக்காக அனைவரும் வரிசையில் முண்டியடித்து காத்து நின்றனர். அப்போது அங்கு சமூக இடைவெளியை யாரும் கடைபிடிக்க வில்லை. வீட்டுக்குள்ளே இருங்கள், வெளியே வந்தால் சமூக இடைவெளியை கடைபிடியுங்கள் என்பது ஊருக்கு உபதேசம் என்பது போல மாறிப்போனது.

யாராக இருந்தாலும் கொரோனா தொற்று ஏற்படத்தான் செய்யும். இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் சமூக இடைவெளி என்பது கட்டாயம் என்பது அங்கு இருந்த அதிகாரிகளுக்கும் தெரியாமல் போனதுதான் வியப்பாக இருக்கிறது என்று அந்த பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். நகராட்சி ஆணையாளர் சார்பில் இந்த விருந்து நடந்ததா? அல்லது ஒப்பந்ததாரர்கள் மூலம் இந்த விருந்து நடந்ததா? என்ற கேள்வியும் அங்கு எழுந்ததாக கூறப்படுகிறது.

சமூக இடைவெளியை கடைபிடிக்க தவறினால் நடவடிக்கை எடுக்கும் நகராட்சி நிர்வாகத்தினரே, இத்தகைய செயலில் ஈடுபடுவது சரியா? என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி கேட்கும் நிலை உருவாகியுள்ளது. இதற்கிடையே நகரின் பல பகுதிகளில் கிருமி நாசினியை சரிவர தெளிக்கவில்லை என்றும், அதற்கான நடவடிக்கையை நகராட்சி அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்