ஊரடங்கால் போக்குவரத்து முடக்கம்: விளைபொருட்களை நேரடியாக விற்பனை செய்யும் விவசாயிகள்
நாமக்கல்லில் ஊரடங்கால் போக்கு வரத்து முடங்கி உள்ளதை தொடர்ந்து விளைபொருட்களை விவசாயிகள் நேரடியாக விற்பனை செய்ய தொடங்கி உள்ளனர்.
நாமக்கல்,
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் கடந்த 24-ந் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் இருந்து வருகிறது. இதையொட்டி போக்குவரத்து முடங்கி விட்டதால் விவசாயிகள் தாங்கள் விளைவித்த விளை பொருட்களை விற்பனை செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.
இதனால் வாழை, பப்பாளி உள்ளிட்ட பழங்கள் மரத்திலேயே பழுத்து வீணாகும் சூழ்நிலை உருவாகி உள்ளதால், விவசாயிகளுக்கு லட்சக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. நாமக்கல்லில் இதை தவிர்க்க விவசாயிகள், மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்று வாகனத்தில் வைத்து நேரடியாக விளை பொருட்களை விற்பனை செய்யும் பணியில் இறங்கி உள்ளனர். இவர்களிடம் விலை குறைவாக இருப்பதால் பொதுமக்கள் போட்டிபோட்டு பழங்களை வாங்கி செல்கின்றனர்.
இதுகுறித்து மோகனூர் அருகே உள்ள ராசிபாளையத்தை சேர்ந்த விவசாயி முருகேசன் கூறியதாவது:-
நான் 3 ஏக்கரில் பப்பாளி மற்றும் 2 ஏக்கரில் முலாம்பழம் பயிரிட்டுள்ளேன். தற்போது இவை பழுக்க தொடங்கி உள்ளன. வழக்கமாக கேரளா, பெங்களூரு பகுதிகளில் இருந்து வரும் வியாபாரிகள் நேரடியாக தோட்டத்திற்கு வந்து பழங்களை வாங்கி சென்று விடுவார்கள்.
ஆனால் தற்போது கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் போக்குவரத்து முற்றிலும் முடங்கி உள்ளது. விவசாய விளை பொருட்களை ஏற்றிச்செல்ல எந்த தடையும் இல்லை என அரசு அறிவித்தாலும் வியாபாரிகள் வர தயக்கம் காட்டுகிறார்கள். மிகவும் குறைவான வியாபாரிகளே வருகை தருகிறார்கள். அவர்களும் கிலோ ரூ.20-க்கு விற்பனையாக வேண்டிய பழங்களை ரூ.5-க்கு மட்டுமே கேட்கிறார்கள்.
இதனால் எனக்கு ரூ.3 லட்சம் வரை நஷ்டம் ஏற்படும் சூழ்நிலை உருவானது. எனவே நான் நேரடியாக விற்பனை செய்ய தொடங்கி உள்ளேன். இங்கு கிலோ ரூ.10 முதல் ரூ.15 வரை விற்பனை செய்கிறேன். தினசரி 600 கிலோ வரை விற்பனையாகிறது. இதன் மூலம் நஷ்டத்தை தவிர்க்க முடிந்தது என்று அவர் கூறினார்.
இதேபோல் தொட்டியம் பகுதியை சேர்ந்த விவசாயி காமராஜ் கூறியதாவது:-
எனக்கு தொட்டியத்தில் 40 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் வாழை சாகுபடி செய்துள்ளேன். இந்த வாழைகள் தற்போது அறுவடை செய்யும் நிலையில் உள்ளன. வழக்கமாக வியாபாரிகள் கிலோ ரூ.20-க்கு தோட்டத்தில் வந்து வாங்கி சென்று விடுவார்கள். ஆனால் தற்போது ஊரடங்கால் போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் முடங்கி இருப்பதால் ஒரு கிலோ பழத்தை ரூ.5-க்கு மட்டுமே வியாபாரிகள் கேட்கிறார்கள்.
எனவே நஷ்டத்தை தவிர்க்க நாமக்கல்லுக்கு வந்து நேரடி விற்பனையில் இறங்கி உள்ளேன். இங்கு ஒரு பழம் ரூ.2-க்கு விற்பனை செய்கிறேன். தினசரி 30 வாழைத்தார்கள் வரை விற்பனையாகிறது. இதன்மூலம் பெரிய அளவில் லாபம் கிடைக்காவிட்டாலும் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மலிவு விலையில் விற்பனை செய்த திருப்தியில் இருக்கிறேன் என்று அவர் கூறினார்.
இதேபோல் அனைத்து விவசாயிகளும் நேரடி விற்பனையில் ஈடுபட்டால் அவர்களுக்கும் நஷ்டம் ஏற்படாமல் தவிர்க்க முடியும். அதே நேரத்தில் பொதுமக்களுக்கும் குறைந்த விலையில் விளைபொருட்கள் கிடைக்கும் என வேளாண்மைதுறை அதிகாரிகள் கூறினர்.