கடையநல்லூரில் தனியாக வசித்த மத்திய பாதுகாப்பு படை அதிகாரியின் தாயாருக்கு மருத்துவ உதவி - டுவிட்டரில் விடுத்த வேண்டுகோளை ஏற்று முதல்-அமைச்சர் நடவடிக்கை

கடையநல்லூரில் டுவிட்டரில் விடுத்த வேண்டுகோளை ஏற்று மத்திய பாதுகாப்பு படை அதிகாரியின் தாயாருக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மருத்துவ உதவி செய்து கொடுத்த சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சி அடைய செய்து உள்ளது.

Update: 2020-04-23 23:00 GMT
தென்காசி, 


தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சிக்கு உட்பட்ட கிருஷ்ணாபுரம் கருப்பன் கோவில் வடக்கு தெருவை சேர்ந்தவர் கருப்பையா. இவருடைய மனைவி சுப்பம்மாள் (வயது 89). இவர்களுடைய மகன் ரவிகுமார். இவர் சென்னையில் மத்திய பாதுகாப்பு படை பிரிவில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் ரவிகுமார் இடமாற்றம் காரணமாக குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் பணிபுரிந்து வருகிறார். அவருடைய குடும்பத்தினர் சென்னையில் வசித்து வருகின்றனர்.

வேண்டுகோள்

ரவிகுமாரின் தந்தை கருப்பையா ஏற்கனவே இறந்து விட்டார். இதனால் தாயார் சுப்பம்மாள் மட்டும் கிருஷ்ணாபுரத்தில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் வயதான தனது தாயார், ஆதரவு இல்லாமலும், 144 தடை உத்தரவு காரணமாகவும் மருத்துவமனை சென்று சிகிச்சை பெற போதிய வசதிகள் இல்லாமல் சிரமப்படுவதை அறிந்து ரவிகுமார் வேதனை அடைந்தார்.

உடனே அவர் தனது தாயாருக்கு உதவிடும்படி தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் டுவிட்டர் பக்கத்தில் வேண்டுகோள் விடுத்து பதிவு செய்தார். அதை கனிவுடன் பரிசீலித்த முதல்-அமைச்சர், தென்காசி மாவட்ட கலெக்டர் அருண் சுந்தர் தயாளனை தொடர்பு கொண்டு, ரவிகுமாரின் தாயாருக்கு சுகாதாரத்துறை மூலம் தேவையான உதவியை செய்து கொடுக்கும்படி உத்தரவு பிறப்பித்தார்.

மருத்துவ உதவி

அதன்பேரில், கடையநல்லூர் சுகாதார துறையினர், ரவிகுமாரின் தாயார் சுப்பம்மாள் வீட்டுக்கு சென்று அவருக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்தனர். பின்னர் அதுகுறித்து கலெக்டர் மூலமாக, முதல்-அமைச்சருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பிறகு ரவிகுமாருக்கு டுவிட்டரில் பதில் அளித்த முதல்-அமைச்சர், ‘உங்கள் தாய்க்கு தேவையான மருந்துகள் அவரிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டது. மேலும் அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில், காய்ச்சலோ, இருமலோ, மூச்சுத்திணறல் உள்ளிட்ட எந்த பிரச்சினைகளும் இல்லை. அவர் நலமாக உள்ளார். 

தாங்கள் தைரியமுடன் நிம்மதியாக இருங்கள்‘ என்று குறிப்பிட்டு இருந்தார். மேலும் ரவிகுமாரின் செல்போனிலும் தொடர்பு கொண்டு, ‘உங்கள் தாய்க்கு எந்தவித பிரச்சினையும் இல்லை‘ என்று ஆறுதல் வார்த்தை கூறி இருக்கிறார். பின்னர் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும், ரவிகுமாரை தொடர்பு கொண்டு விவரத்தை கூறியுள்ளார். டுவிட்டரில் விடுத்த வேண்டுகோளை ஏற்று மத்திய பாதுகாப்பு படை அதிகாரியின் தாயாருக்கு முதல்- அமைச்சர் மருத்துவ உதவி செய்த சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

மேலும் செய்திகள்