சங்கரன்கோவில் பகுதியில் நெசவுத்தொழில் பாதிப்பு: விசைத்தறிகள் இயங்காததால் ரூ.100 கோடி வருவாய் இழப்பு

ஊரடங்கு காரணமாக, சங்கரன்கோவில் பகுதியில் நெசவுத்தொழில் பாதிக்கப்பட்டு உள்ளது. அங்குள்ள விசைத்தறிகள் இயங்காததால், ரூ.100 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது. எனவே, சமூக இடை வெளி விட்டு பணியாற்ற தொழிலாளர்களை அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2020-04-23 22:45 GMT
சங்கரன்கோவில், 

பழங்காலத்தில் இருந்தே தமிழர்கள் நெசவுத்தொழிலில் சிறந்து விளங்கி வருகின்றனர். இங்கு நெய்த ஆடைகள் கடல் வாணிபம் மூலம் வெளிநாடுகளுக்கும் பண்டமாற்று முறையில் விற்பனை செய்தனர். பருத்தி ஆடைகள், பட்டு ஆடைகள், மெல்லிய ஆடைகள், கம்பளி ஆடைகள் போன்றவை தமிழர்களின் பெருமையை உலகறியச் செய்தன.

ஆதிச்சநல்லூரில் நடந்த அகழாய்வில் கிடைக்கப்பெற்ற முதுமக்கள் தாழிகளில் ஆபரணங் கள், ஆயுதங்களுடன் பழைய இற்றுப்போன பஞ்சாடைகளும் இருந்தன. பண்டைய காலத்தில் கோவில்கள், அரண்மனைகள், வீடுகளில் பயன்படுத்தப்பட்ட துணிகள் குறித்து சங்க இலக்கியங்களில் எண்ணற்ற மேற்கோள் கள் காட்டப்பட்டு உள்ளன.

தமிழகத்தில் விவசாயத்துக்கு அடுத்தப்படியாக நெசவுத்தொழில் சிறப்புற்று விளங்குகிறது. முன்பு ராட்டையில் நூல் நூற்று துணி நெய்து பயன்படுத்தினர். பின்னர் கைத்தறியை பயன்படுத்தி ஆடைகளை தயாரித்தனர். தற்போது மின் மோட்டாரில் இயங்கக்கூடிய விசைத்தறியை பயன்படுத்தி ஆடைகளை கலைநயத்துடன் வடிவமைக்கின்றனர்.

ஆடைகள் தேக்கம்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில், சுப்புலாபுரம், புளியங்குடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பெரும்பாலானவர்கள் நெசவுத்தொழிலில் ஈடுபட்டு உள்ளனர். இங்கு 5 ஆயிரம் விசைத்தறிக்கூடங்கள் உள்ளன. மேலும் ஏராளமானவர்கள் தங்களது வீடுகளிலேயே ஓரிரு விசைத்தறிகளை அமைத்து துணிகளை நெய்து வருகின்றனர். இதன்மூலம் 15 ஆயிரம் தொழிலாளர்கள் நேரடியாகவும், 10 ஆயிரம் தொழிலாளர் கள் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். சங்கரன்கோவிலில் உள்ள விசைத்தறிகளில் பருத்தி சேலைகளும், சுப்புலாபுரத்தில் உள்ள விசைத்தறிகளில் ‘டர்கி‘ ரக துண்டுகளும் பெருமளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் வேட்டி, லுங்கி, கைக்குட்டை போன்றவைகளும் தயாரிக்கப்படுகிறது. இவற்றை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கின்றனர். இந்த நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், நெசவுத்தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. கடந்த ஒருமாதமாக அனைத்து விசைத் தறிக்கூடங்களும் மூடப்பட்டு உள்ளன. இதனால் அங்கு உற்பத்தி செய்யப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்பிலான துணிகள் தேக்கம் அடைந்துள்ளன. மேலும், அங்கு பணியாற்றிய தொழிலாளர்களும் வருமானம் இழந்து வறுமையில் வாடுகின்றனர்.

ரூ.100 கோடி வருமான இழப்பு

இதுகுறித்து விசைத்தறி உரிமையாளர்கள் சங்க செயலாளர் சுப்பிரமணியன் கூறுகையில், “சங்கரன்கோவில் பகுதியில் உள்ள விசைத்தறிகளில் தினமும் ரூ.80 லட்சம் மதிப்பிலான வேட்டி, சேலைகள், துண்டுகள், லுங்கிகள், கைக்குட்டைகள் போன்றவை உற்பத்தி செய்யப்பட்டது. தற்போது ஊரடங்கு காரணமாக, வாரந்தோறும் ரூ.25 கோடி வீதம் ஒரு மாதத்தில் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது. ஏற்கனவே தயாரித்த துணிகளையும் ஏற்றுமதி செய்ய முடியாத நிலை உள்ளது. விசைத்தறிகளில் உற்பத்தி செய்யப்படும் துணிகளுக்கு 5 சதவீத சரக்கு சேவை வரி (ஜி.எஸ்.டி.) விதிக் கப்படுகிறது. இதனை ரத்து செய்ய வேண்டும். வீடுகளில் விசைத்தறி அமைத்துள்ளவர்களுக்கு மாதந்தோறும் 750 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. இதனை மேலும் தளர்த்தி, இனி சில மாதங்களுக்கு முழுவதுமாக இலவச மின்சாரம் வழங்க வேண்டும்“ என்றார்.

சமூக இடைவெளியுடன் பணியாற்ற...

இதேபோன்று விசைத்தறி தொழிலாளர்கள் சங்க துணை செயலாளர் மாணிக்கம் கூறுகையில், “ஊரடங்கு காரணமாக சங்கரன்கோவில் பகுதியில் உள்ள விசைத்தறி தொழிலாளர்களுக்கு கடந்த ஒரு மாதத்தில் மொத்தம் ரூ.1½ கோடி வருமான இழப்பு ஏற்பட்டு உள்ளது. மேலும் வீடுகளில் அமைக்கப்பட்டுள்ள விசைத்தறிகளையும் இயக்குவதற்கு அரசு அதிகாரிகள் அனுமதிக்க மறுக்கின்றனர். இதனை மீறினால் அபராதம் விதிப்பதாக மிரட்டுகின்றனர். இதனால் அனைத்து தொழிலாளர்களும் முழுவதுமாக வேலைவாய்ப்பின்றி தவித்து வருகிறோம்.

ரேஷன் கடைகளில் அரசு வழங்கிய ரூ.1,000 மற்றும் இலவச உணவுப்பொருட்களை வைத்துதான் குடும்பத்தை நடத்தி வருகிறோம். விசைத்தறி தொழிலாளர் நலவாரியம் மூலம் அரசு ஒதுக்கிய ரூ.1,000 நிவாரணத்தொகை இன்னும் கிடைக்கவில்லை. எனவே வறுமையில் வாடும் விசைத்தறி தொழிலாளர்களுக்கு அரசு நிவாரணத்தை ரூ.5 ஆயிரமாக உயர்த்தி தர வேண்டும். மேலும் விசைத்தறிக்கூடங்களில் 2 மீட்டர் இடைவெளியிலேயே விசைத்தறிகள் அமைக்கப்பட்டு உள்ளன. எனவே, அங்கு தொழிலாளர்கள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளி விட்டு, சுகாதார மான முறையில் பணியாற்றுவதற்கு அரசு அனுமதிக்க வேண்டும்“ என்றார்.

மேலும் செய்திகள்