ரெட்டியார்பாளையம், ஏலச்சீட்டு நடத்தி ரூ.1½ கோடி மோசடி - கணவன், மனைவி மீது சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்கு

புதுவையில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.1½ கோடி மோசடி செய்ததாக கணவன், மனைவி மீது சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update: 2020-04-23 08:39 GMT
புதுச்சேரி,

புதுச்சேரி ரெட்டியார்பாளையம் ஜவகர்நகர் அரசு குடியிருப்பை சேர்ந்தவர் வெங்கடேசன். தனியார் நிறுவன ஊழியர். இவருடைய மனைவி வசந்தி (வயது 43). இவர் அதே பகுதியில் வசிக்கும் பாஸ்கர், மஞ்சுளா தம்பதியிடம் ரூ.1 லட்சத்து 17 ஆயிரம் சீட்டுப்பணம் கட்டி வந்ததாக கூறப்படுகிறது.

இதேபோல சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 40-க்கும் மேற்பட்டோர், அவர்களிடம் ரூ.5 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை பல்வேறு மாதாந்திர சீட்டு பணம் செலுத்தி வந்தார்களாம்.

ஆனால் சீட்டுப்பணம் கட்டியவர்களிடம் சீட்டு முடிந்த பிறகும் பணத்தை கொடுக்காமல் பாஸ்கர் காலம் கடத்தி வந்தார். இதுபற்றி ரெட்டியார்பாளையம் போலீஸ் நிலையத்தில் வசந்தி புகார் செய்தார். இது காவல் துறை தலைமையகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த அறிவுறுத்தப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் ரூ.1 கோடியே 45 லட்சம் மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து சீட்டு நடத்தி பணம் மோசடி செய்ததாக மஞ்சுளா, பாஸ்கர் தம்பதி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்