கொரோனா தொற்றால் ‘சீல்’ வைக்கப்பட்ட பகுதியில் ரூ.22 லட்சம் பட்டுவாடா - தபால் துறை ஊழியர்கள் வீடு தேடி வழங்கினர்

புதுச்சேரி தபால் துறை ஊழியர்கள் கொரோனாவால் ‘சீல்’ வைக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு ரூ.22 லட்சம் பட்டுவாடா செய்தனர்.

Update: 2020-04-23 08:39 GMT
புதுச்சேரி,

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த வருகிற 3-ந் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. புதுவையிலும் ஊரடங்கு அமலில் உள்ளது. கொரோனாவால் ஒருவர் பாதிக்கப்பட்டு இருந்தால் அவர் வசிக்கும் பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளும் கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டு, சாலைகள் ‘சீல்’ வைக்கப்படும்.

அதன்படி புதுவையில் திருவண்டார்கோவில், திரு புவனை, திருக்கனூர், காட்டேரிக்குப்பம், மூலக்குளம் ஆகிய பகுதிகள் சீல் வைக்கப்பட் டுள்ளன. இங்கு புதுச்சேரி கோட்ட தபால் துறை சார்பில் ஆதார் எண் மூலமாக பணப்பட்டுவாடா சேவையை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

வில்லியனூர் சப்-கலெக்டர் சஷ்வத் சவுரப் வேண்டுகோளுக்கு இணங்க அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் அகில் ஆர்.நாயர், பணப் பட்டுவாடா செய்ய தபால் ஊழியர்கள் அடங்கிய சிறப்பு குழுக்களை அமைத்துள்ளார். அவர்கள் பணம் தேவைப்படுவோர் வீட்டிற்கே சென்று பணத்தை பட்டுவாடா செய்து வருகின்றனர்.

உதவி அஞ்சல் உட்கோட்ட கண்காணிப்பாளர் முத்துமாரி தலைமையில் தபால்துறை ஊழியர்கள், வருவாய் அதிகாரிகளுடன் இணைந்து முககவசம், கையுறை அணிந்து திருவண்டார் கோவில் பகுதியில் 312 பேருக்கு ரூ.7 லட்சத்து 95 ஆயிரமும், திருபுவனை பகுதியில் 126 பேருக்கு ரூ.3 லட்சத்து 39 ஆயிரமும், திருக்கனூரில் 41 பேருக்கு ரூ.ஒரு லட்சத்து ஆயிரத்து 700-ம், காட்டேரிக்குப்பத்தில் 69 பேருக்கு ரூ.2 லட்சத்து 20 ஆயிரமும், மூலக்குளத்தில் 325 பேருக்கு ரூ.7 லட்சத்து 59 ஆயிரத்து 700-ம் என மொத்தம் ரூ.22 லட்சத்து 15 ஆயிரத்து 400 பட்டுவாடா செய்யப்பட்டது.

தபால்துறையின் சேவையின் மூலம் வங்கிக்கணக்கில் உள்ள பணத்தை எடுக்க விரும்புபவர்கள் 9962887517, 9994488568 ஆகிய எண்களில் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணிக்குள் தங்களின் பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று புதுச்சேரி அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் அகில் ஆர்.நாயர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்