சாராயம் காய்ச்சிய ஊராட்சி துணைத்தலைவர் உள்பட 4 பேர் கைது
போடி அருகே சாராயம் காய்ச்சிய ஊராட்சி துணைத்தலைவர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
போடி,
ஊரடங்கு உத்தரவு காரணமாக தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் மது பிரியர்கள், மதுபானம் கிடைக்காமல் போதைக்காக வேறு வழிகளை தேடி வருகின்றனர். அந்த வகையில் தற்போது சாராயம் தலைதூக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக தேனி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மறைமுகமாக சாராயம் காய்ச்சி விற்கப்படுகிறது. இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி உத்தரவின்பேரில் சாராயம் காய்ச்சுவதை தடுக்கும் வகையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் போடி அருகே எரணம்பட்டி பகுதியில் சாராயம் காய்ச்சுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போடி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மர் தலைமையிலான போலீசார் அங்கு ரோந்து சென்றனர். அப்போது அதே ஊரை சேர்ந்த முகமது சித்திக் (வயது 49), தனக்கு சொந்தமான தோட்டத்தில் நண்பர்கள் கோணாம்பட்டியை சேர்ந்த செல்வம் (41), பண்ணாயிரம் (40), போடி அம்மாபட்டியை சேர்ந்த முருகன் (46) ஆகியோருடன் சேர்ந்து சாராயம் காய்ச்சியது தெரியவந்தது.
இதையடுத்து அவர்களை போலீசார் பிடிக்க முயன்றனர். அப்போது 4 பேரும் தப்பியோட முயன்றனர். இதற்கிடையே போலீசார், சாராயம் காய்ச்சிய 4 பேரையும் விரட்டி பிடித்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிந்து முகமது சித்திக் உள்பட 4 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 12 லிட்டர் சாராய ஊறல் மற்றும் அவற்றை தயாரிக்க வைத்திருந்த பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்டவர்களில் செல்வம் என்பவர் ஊராட்சி துணைத்தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.