ஊரடங்கு உத்தரவால் முடங்கிய போக்குவரத்து: அரசு பணிமனைகளில் பஸ்களை பழுது பார்க்கும் பணி தீவிரம்
ஊரடங்கு உத்தரவால் போக்குவரத்து முடங்கியது. இதனால் அரசு பணிமனைகளில் பஸ்களை பழுது பார்க்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
கரூர்,
ஊரடங்கு உத்தரவால் போக்குவரத்து முடங்கியது. இதனால் அரசு பணிமனைகளில் பஸ்களை பழுது பார்க்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
தொழில் நகரம்
கரூர் மாவட்டத்தில் கரூர், அரவக்குறிச்சி, குளித்தலை, கிருஷ்ணராயபுரம் ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய சுமார் 8 லட்சம் மக்கள் தொகை வசிக்கும் மாவட்டமாக உள்ளது.
கரூர் நகரை பொறுத்த வரை பஸ் கூண்டு கட்டுதல், கொசுவலை உற்பத்தி,டெக்ஸ்டைல் உள்ளிட்ட பல்வேறு தொழில்களை கொண்டு சிறப்புற்று விளங்குகிறது. மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து நகரத்தை நோக்கி மட்டுமல்லாமல், அண்டை மாவட்டமான நாமக்கல், திருச்சி, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கானவர்கள் நாள் தோறும் கரூர் நகருக்கு வேலைக்காகவும், தொழில் ரீதியாகவும் பலர் வந்து செல்கின்றனர். இவ்வாறு பலர் வந்து செல்வதில் முக்கிய பங்கு வகிப்பது அரசு போக்கு வரத்து கழகத்தின் மூலம் இயக்கப்படும் அரசு பஸ்கள் என்றால் அது மிகையாகாது.
கரூரில் இருந்து திருச்சி, கோவை, மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு மட்டுமல்லாமல் சென்னை உள்ளிட்ட பல்வேறு தொலை தூர மாவட்டங்களுக்கும், அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களையும் இணைக்கும் வகையில் நகர பேருந்துகளும், கிராம பேருந்துகளும் இயக்கப்படுவதால் விவசாயிகள் பலர் கிராமங்களில் இருந்து தாங்கள் விளைவித்த காய்கறி, கீரைகளை உழவர் சந்தைக்கு எடுத்து வந்து விற்பனை செய்வதில் கிராமங்களுக்கு இயக்கப்படும் பஸ்கள் விவசாயிகளுக்கு பேருதவியாக இருப்பதில் ஐயமில்லை.
295 பஸ்கள்
இவ்வாறு மாவட்ட மக்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் அரசு பஸ்கள் கொரோனா தொற்று உலகம் முழுவதும் தீவிரமாக பரவி வரும் நிலையில் கடந்த மார்ச் 24-ந்தேதி முதல் தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டதால் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து கடைகள், நிறுவனங்கள் அடைக்கப்பட்டதுடன், தனியார் பஸ்கள் உள்பட அரசு பஸ்களும் இயக்கப்படவில்லை. இதனால் பொது மக்கள் வீட்டிற்குள் முடங்கி கிடக்கும் சூழ்நிலை உருவானது. கரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட கரூர் கிளை 1, கரூர் கிளை 2, அரவக்குறிச்சி, குளித்தலை, முசிறி உள்ளிட்ட போக்குவரத்து பணிமனைகளில் இருந்து இயக்கப் படும் தொலை தூர பஸ்கள், கிராமபுற பஸ்கள் என மொத்தம் 295 பஸ்கள் இயக்கப்படுகின்றன.
இவ்வாறு இயக்கப்படும் பஸ்கள் மூலம் நாள் தோறும் 1 லட்சத்து 76 ஆயிரம் பயணிகள் அரசு பஸ்சில் பயணிக்கின்றனர்.
அதன் மூலம் வரும் வருவாயாக ஒரு நாளைக்கு ரூ.32 லட்சம் வருவாய் ஈட்டி தரும் அரசு பஸ்கள் தற்போது அந்த அந்த பணிமனையில் நிறுத்தப்பட்டு உள்ளதுடன் அனைத்து பஸ்களும் சுத்தம் செய்யப்பட்டு கிருமிநாசினி தெளிக்கப்பட்டு பேருந்துகளில் உள்ள பழுதுகள் அனைத்தும் சரி செய்யப்பட்டு ஓட்டத்திற்கு தயார் ஆகும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
மேலும், கொரோனா நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பேருந்துகள் இயக்கப்படாமல் உள்ளதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வரும் நிலையிலும், மக்களின் நலனை கருத்தில் கொண்டு அரசு செயல்படுவது அனைவராலும் பாராட்டதக்கதாகவே உள்ளது.