மாவட்டத்தில், கொரோனா பாதித்த மேலும் 7 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்
மாவட்டத்தில் கொரோனா பாதித்த மேலும் 7 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
கடலூர்,
கடலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், டெல்லி மாநாட்டுக்கு சென்று திரும்பிய 17 பேருக்கு கொரோனா உறுதியானது. தொடர்ந்து அவர்களுடன் தொடர்பில் இருந்த உறவினர்கள் 9 பேர் என மொத்தம் 26 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
இவர்கள் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் இவர்களில் 5 பேர் குணமடைந்து கடந்த 15-ந்தேதி அவரவர் வீடுகளுக்கு திரும்பினர். அதன்பிறகு 3 பேர் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதன் மூலம் 18 பேர் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.
அதில் 7 பேருக்கு 2 முறை உமிழ்நீர் மற்றும் ரத்த பரிசோதனை ஆய்வு மேற்கொண்டதில், அவர்களுக்கு பாதிப்பு இல்லை என்று முடிவு வந்தது. அதாவது இவர்கள் 7 பேரும் பூரணமாக குணமடைந்தனர். இதையடுத்து இவர்கள் 7 பேரும் நேற்று அவரவர் வீடுகளுக்கு பாதுகாப்புடன் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.
அதேபோல் இது வரை மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழப்பு இல்லை. இதன் காரணமாக சுகாதாரத்துறையினர் உற்சாகம் அடைந்துள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 11 பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது தவிர கொரோனா அறிகுறிகளுடன் கடலூர் அரசு மருத்துவமனையில் 21 பேரும், விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் 2 பேர், சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் 23 பேர் என மொத்தம் 46 பேர் தனி வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதித்தவர்களின் தொடர்பில் இருந்த 247 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
மாவட்டத்தில் இது வரை 1,484 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், 26 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. 1,233 பேருக்கு பாதிப்பு இல்லை. 225 பேருக்கு பரிசோதனை முடிவு வர வேண்டியதிருக்கிறது.