பெரம்பலூர் ஒன்றிய கிராம பகுதிகளில் சுகாதார சீர்கேட்டால் நோய் பரவும் அபாயம் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

பெரம்பலூர் ஒன்றிய கிராம பகுதிகளில் சுகாதார சீர்கேட்டால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? என பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Update: 2020-04-23 03:36 GMT
பெரம்பலூர், 

பெரம்பலூர் ஒன்றிய கிராம பகுதிகளில் சுகாதார சீர்கேட்டால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? என பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

கிருமி நாசினி- கொசு மருந்து

கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனால் பெரம்பலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட நொச்சியம் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் ஊராட்சி நிர்வாகம் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுத்த மாதிரியே தெரியவில்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க செல்லும் போது கூட முககவசம் அணிவதில்லை. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊராட்சி நிர்வாகம் பெயரளவுக்கே கிருமி நாசினி உள்ளிட்டவை தெளிக்கப்படுவதாகவும், கொசு மருந்து அடிக்கப்படுவதில்லை என்று அந்த பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

துர்நாற்றம் வீசுகிறது

நொச்சியம் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் வடிகால்கள் தூர்வாரப்படாததால் கழிவுநீர் நிரம்பி துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் சில தெருக்களில் வடிகால் வசதி இல்லாததால் கழிவுநீர் தெருக்களில் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் அதில் கொசுக்கள் உற்பத்தியாகுவதால் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. சுகாதார வளாகங்களும் சரிவர பராமரிக்கப்படாமலே உள்ளது. மேலும் தெருக்களில் வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டிகள் நிறைந்தும், குப்பைகள் அப்புறப்படுத்தாமல் உள்ளது.

செல்லியம்பாளையம் ஊரின் மையப்பகுதியிலேயே சேகரித்த குப்பைகள் வைக்கப்பட்டும், பிளாஸ்டிக் பாட்டில்கள் உள்ளிட்ட குப்பைகள் சாக்குப்பைகளில் வைக்கப்பட்டும் அப்புறப்படுத்தாமலே உள்ளது. இதனால் சுகாதார கேடு ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நொச்சியம் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க முன்வர வேண்டும் என்று பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

நோய் பரவும் அபாயம்

இதேபோல் சிறுவாச்சூர் கிராம ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் உள்ள வடிகால்கள் தூர்வாரப்படாததால் கழிவுநீர் செல்ல முடியாமல் உள்ளது. இதில் சிறுவாச்சூரில் பிரசித்தி பெற்ற மதுரகாளியம்மன் கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள வடிகாலில் கழிவுநீர் குளம் போல் தேங்கியுள்ளது. மேலும் அதனருகே உள்ள தெப்பக்குளத்தில் கழிவுநீர் பெருகியும், அதில் குப்பைகளும் கொட்டப்பட்டு வருகிறது. அதனை சரி செய்ய ஊராட்சி நிர்வாகத்திடம் ஏற்கனவே பலமுறை அப்பகுதி மக்கள், கோவிலுக்கு வந்து சென்ற பக்தர்கள் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுத்தபாடில்லை. மேலும் சில தெருக்களில் உள்ள கழிவுநீர் வடிகால்கள் பன்றிகளின் வாழ்விடமாக மாறி உள்ளது. இதனால் அந்தப்பகுதிகளில் துர்நாற்றம் வீசுவதோடு, தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. தற்போது கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க சிறுவாச்சூர் ஊராட்சிக்கு உட்பட்ட கிராம பகுதிகளில் முக்கியமான இடங்களில் மட்டும் கிருமி நாசினி பெயரளவுக்கே தெளிக்கப்படுவதாகவும், தெருக்களில் கிருமி நாசினி தெளிக்க யாரும் வருவதில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

பொதுமக்கள் கோரிக்கை

கொரோனா வைரசை பரவுதை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஊராட்சி நிர்வாகம் எடுக்க முன்வர வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் வலியுறுத்துகின்றனர். மேலும் சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலுக்கு செல்லும் சாலையோரத்தில் பெரம்பலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட சுமார் 50-க்கும் மேற்பட்ட தனிநபர் இல்ல கழிப்பறைகள் தற்போது பயன்பாடில்லாமலும், அதில் சிலவற்றில் மேற்கூரையில்லாமலும், கதவுகள் இல்லாமலும் காணப்படுகின்றன. மேலும் சுகாதார வளாகங்களும் சரிவர பராமரிக்கப்படாததால், பொதுமக்கள் திறந்த வெளியில் இயற்கை உபாதையை கழிக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த தனிநபர் இல்ல கழிப்பறைகளை இடித்து விட்டு, புதிதாக தண்ணீர் வசதி, மின் வசதி, சுற்றுச்சுவர் வசதிகளுடன் கழிப்பறைகளை கட்டி கொடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்