ஊரடங்கு உத்தரவை மீறியதாக 3500-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு - குடியாத்தத்தில் போலீஸ் சூப்பிரண்டு பேட்டி

குடியாத்தத்தில் வாகன சோதனை நடக்கும் இடங்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு செய்தார். அப்போது 3,500-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

Update: 2020-04-22 22:30 GMT
குடியாத்தம்,

கொரோனா ஊரடங்கு உத்தரவால் குடியாத்தத்தில் உள்ள புதிய பஸ் நிலையம் பகுதி, சித்தூர் கேட், நேதாஜி சவுக் உள்பட பல்வேறு இடங்களில் தீவிர வாகனச் சோதனை நடந்து வருகிறது. வாகனச் சோதனை நடக்கும் இடங்களை வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் நேற்று மாலை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது வாகனங்களில் சென்றவர்களிடம் செல்லும் காரணம் குறித்துக் கேட்டறிந்தார்.

பின்னர் போலீஸ் சூப்பிரண்டு நிருபர்களிடம் கூறியதாவது:-

வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவாமல் இருக்க ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. ஊரடங்கு உத்தரவை மீறி இரு சக்கர வாகனங்களில் சென்றதாக 3 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. நூற்றுக்கும் மேற்பட்ட 3 மற்றும் 4 சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஊரடங்கு காலத்தில் காலை நேரத்தில் மட்டுமே பொதுமக்கள் காய்கறிகள், மளிகைப்பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வாங்க செல்ல வேண்டும். அப்போது கடைகளில் சமூக விலகலை கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும். அதை, ஊரடங்கு காலம் முடியும் வரை பின்பற்ற வேண்டும்.

அத்தியாவசியப் பணிகளுக்கு மட்டுமே வீட்டை விட்டு வெளியில் வர வேண்டும், தேவையில்லாமல் வெளியில் வருபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். பொதுமக்கள் அரசின் உத்தரவை பின்பற்றி சமூக விலகலை கடைப்பிடித்து, மாவட்ட நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன், சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் உள்பட பலர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்