வேலூர் மாவட்டத்தில், ஊரடங்கு உத்தரவை மீறிய 1,031 பேர் கைது - 1,028 வாகனங்கள் பறிமுதல்
வேலூர் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறிய 1,031 பேர் 2-ம் கட்டமாக கைது செய்யப்பட்டு, சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். அவர்களிடம் இருந்து 1,028 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.;
வேலூர்,
கொரோனா தொற்று பரவுவதை தடுக்க இந்தியா முழுவதும் முதற்கட்டமாக கடந்த மார்ச் 25-ந் தேதி முதல் ஏப்ரல் 14-ந் தேதி வரை 21 நாட்கள் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஊரடங்கின்போது பொதுமக்கள் பால், காய்கறி, மளிகைப்பொருட்கள், மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு மட்டுமே வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டும் என்றும், அவ்வாறு செல்லும்போது சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. ஆனாலும் பலர் இதனை பின்பற்றாமல் மோட்டார் சைக்கிள், கார்களில் சுற்றித்திரிந்தனர். அவர்களை போலீசார் கைது செய்து, வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
வேலூர் மாவட்டத்தில் முதற்கட்ட ஊரடங்கின்போது உத்தரவை மீறிய 2 ஆயிரத்து 879 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்கள். அவர்களிடமிருந்து 2 ஆயிரத்து 292 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கடந்த 18-ந் தேதி முதல் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் உரிமையாளர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டு வருகின்றன. அதன்படி நேற்று முன்தினம் வரை மாவட்டம் முழுவதும் 523 வாகனங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் கொரோனா தொற்று அதிகரித்ததால் 2-ம் கட்டமாக கடந்த 15-ந் தேதி முதல் அடுத்த மாதம் (மே) 3-ந் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அதே கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்கும்படி அரசு தெரிவித்துள்ளது. ஆனால் பலர் தேவையில்லாமல் சாலைகளில் சுற்றித்திரிகின்றனர். அவர்களை போலீசார் கைது செய்து, வாகனங்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.
அதன்படி கடந்த 15-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை 7 நாட்களில் வேலூர் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறிய 1,031 பேர் கைது செய்யப்பட்டு, பின்னர் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். மேலும் அவர்களிடமிருந்து மோட்டார் சைக்கிள், கார் உள்ளிட்ட 1,028 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று அதிகரித்து வரும்வேளையில் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வீட்டை விட்டு வெளியே வரவேண்டும். அப்போது கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியேறி சுற்றித்திரிபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.