நோயாளிகள் அதிகரித்தால் ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி கொரோனா வார்டாக மாற்றப்படுகிறது 100 படுக்கைகளுக்கான கட்டில்கள் வந்தன

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தால் நாகர்கோவில் அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரியை கொரோனா வார்டாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

Update: 2020-04-23 01:06 GMT
நாகர்கோவில், 

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தால் நாகர்கோவில் அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரியை கொரோனா வார்டாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதற்காக அங்கு 100 படுக்கைகளுக்கான கட்டில்கள் வந்தன.

வர்ணம் பூசும் பணி

குமரி மாவட்டத்தில் 16 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 3 பேர் குணம் அடைந்துள்ளனர். இருப்பினும் இந்த மாவட்டத்தில் கொரோனா நோயாளிகள் அதிகரிக்கும் பட்சத்தில் தனியார் ஆஸ்பத்திரிகள், தனியார் மருத்துவக்கல்லூரி, அரசு மற்றும் தனியார் கல்லூரிகள், நாகர்கோவிலில் உள்ள கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி ஆகியவற்றில் கொரோனா நோயாளிகளுக்கான சிறப்பு வார்டுகளாக மாற்ற மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

அதன்படி நாகர்கோவில் கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரியின் குழந்தைகள் சிகிச்சை பிரிவில் நோயாளிகள் இல்லாததால் அந்த பிரிவை கொரோனா வார்டாக தயார் செய்ய உத்தரவிடப்பட்டு இருந்தது. இதையடுத்து அந்த வார்டை சுத்தம் செய்து, வர்ணம் பூசும் பணி கடந்த சில நாட்களாக நடந்து வந்தது.

100 கட்டில்கள் வந்தன

இந்த பணி கடந்த சில தினங்களுக்கு முன்பு முடிவடைந்தது. மேலும் அந்த வார்டில் உள்ள கட்டில்கள் மற்றும் மெத்தைகள் மிகவும் பழமையானதாகவும், பல கட்டில்கள் சேதம் அடைந்த நிலையிலும் காணப்பட்டன. எனவே இந்த வார்டில் உள்ள பழைய கட்டில்கள் அனைத்தையும் அகற்றிவிட்டு, புதிய கட்டில்களாக மாற்ற மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டதோடு புதிதாக 100 இரும்பு கட்டில்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

அந்த கட்டில்கள் நேற்று நாகர்கோவில் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள குடோனில் இருந்து வாகனங்கள் மூலமாக கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டன. பின்னர் அவை அனைத்தும் மருத்துவக்கல்லூரி டீன் கிளாரன்ஸ் டேவி முன்னிலையில் சரிபார்த்து இறக்கி வைக்கப்பட்டன. கட்டில்கள் போடப்பட உள்ள வார்டை மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார் பார்வையிட்டார். அப்போது மாநகராட்சி நகர்நல அதிகாரி கின்சால், சுகாதார ஆய்வாளர் மாதவன்பிள்ளை ஆகியோர் உடன் இருந்தனர்.

இன்னும் ஒரு சில தினங்களில் இந்த கட்டில்களில் விரிப்பதற்கான மெத்தைகளும் வந்து சேர்ந்து விடும். அதன்பிறகு கொரோனா சிறப்பு வார்டு தயாராகி விடும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்